ஒவ்வொரு அலகு ரத்தமும் மூன்று உயிர்களைப் பாதுகாக்கிறது பேராசிரியர் சுபாஷ்

ஒவ்வொரு அலகு ரத்தமும் மூன்று உயிர்களைப் பாதுகாக்கிறது, தன்னார்வமாக ரத்த தானம் அளிப்பது தொடர்பாக பரவலான விழிப்புணர்வு அவசியம்: பேராசிரியர் சுபாஷ்

ரத்த தானம் குறித்த கூடுதல் விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம் என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ரத்தம் ஏற்றுதல் துறையின் தலைவர் பேராசிரியர் சுபாஷ் தெரிவித்துள்ளார். “ரத்த தானம், அதன் முக்கியத்துவம், உண்மைகள் மற்றும் பொய்கள்” என்ற தலைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது ரத்த தானம் தொடர்பாக பரப்பப்படும் பல்வேறு தவறான செய்திகள் குறித்துப் பேசுகையில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், குணமடைந்து 28 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம் என்று டாக்டர் சுபாஷ் கூறினார். “ரத்த தானம் செய்வதால் கொவிட் தொற்று ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை”, என்று அவர் தெளிவுபடுத்தினார். எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் இணை இயக்குநராகவும் டாக்டர் சுபாஷ் பொறுப்பு வகிக்கிறார்.

முதல் அல்லது இரண்டாவது கட்டம், எதுவாக இருப்பினும், கொவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு ரத்தத்தை தானமாக வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார். “பாதுகாப்பாக இருப்பினும் ரத்த தானம் செய்தது முதல் 48 முதல் 72 மணி நேரங்களுக்குப் பிறகு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்”, என்றார் அவர். ரத்த தானம் செய்வதற்கு ஒருவர் தகுதி பெற்றுள்ளாரா என்பதை அறிவதற்காக ரத்தக் கொதிப்பு, ஹீமோகுளோபின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதால் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு அது சிறிய ரக முழு உடல் பரிசோதனைக்கு ஒப்பானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அலகு ரத்தமும் மூன்று உயிர்களைப் பாதுகாக்கிறது, தன்னார்வமாக ரத்த தானம் அளிப்பது தொடர்பாக பரவலான விழிப்புணர்வு அவசியம் என்று பேராசிரியர் வலியுறுத்தினார்.

ரத்ததான முகாம்கள் போன்ற பல்வேறு முயற்சிகள் வருடம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், கொடையாளிகளின் எண்ணிக்கையை பெருந்தொற்று வெகுவாகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனிடைம் பிளட் டோனர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர் திரு ஜி வெங்கட் பேசுகையில், பெருந்தொற்றுக்கு முன்பு, கல்லூரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ரத்தம் அளிக்க முன் வந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் வீடுகளிலிருந்து பணிபுரியும் கலாச்சாரத்தாலும், இதர சவால்களாலும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது. தற்போதைய நிலை, ரத்த வங்கி மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் சவாலானதாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மகப்பேறு, விபத்துகள், புற்றுநோய், கல்லீரல் இருதயம், சிறுநீரகம் மற்றும் டயாலிசிஸ் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் அதிக ரத்தம் தேவைப்படுகிறது. கொடையாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்,  வாழ்நாள் கொடையாளியாக மாறுவது தொடர்பாக பள்ளி காலம் முதலே மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஓர் அவசர காலத்தின்போது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக அதிக அளவிலான ரத்தத்திற்கு ஏற்பாடு செய்த திருமிகு வி. விஜயஸ்ரீ, தன்னலமின்றி ரத்த தானம் அளிக்க முன்வரும் பல்வேறு இளைஞர்களின் செயலைப் பாராட்டினார். மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் திருமிகு விஜயஸ்ரீ, அதிக மக்களைச் சென்றடைவதால், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகத்தின் வாயிலாக உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். ரத்த தானம் பற்றிய முக்கிய அம்சங்கள் மக்களை சரியாக சென்றடைவதற்காக கல்லூரி போன்ற நிறுவனங்கள், முக்கிய செய்திகள் அடங்கிய சுவரொட்டிகளை உருவாக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திரு ஜே. காமராஜ், ஏராளமான மருத்துவ மையங்களில் பல்வேறு நோய்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால், இதுகுறித்த விழிப்புணர்வு உள்ளாட்சி அமைப்புகள் அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ரத்த தானத்தை பொருத்தவரை சிறிய நாடுகளும் இந்தியாவை விட முன்னணியில் இருப்பதாகவும், சுமார் 140 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் ஒரு சதவீதத்தினர் கூட இந்த உயரிய சேவையில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார், திருமிகு வித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார். ரத்த தானத்தால் பயனடைந்துள்ள திருமிகு காயத்ரி சுப்பிரமணியம், தமக்கு உரிய காலத்தில் உதவி அளித்த கொடையாளிகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்