அந்தமான் சிற்றறைச் சிறையில் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது
பாதுகாப்பு அமைச்சகம் அந்தமான் சிற்றறைச் சிறையில் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர்
1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள சிற்றறைச் சிறைக்கு பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டுப் படைகளின் வாத்திய இசை, ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி, 1971 போர் குறித்த குறும்படம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ராணுவத் தளபதி பிரிகேடியர் ராஜீவ் நக்யால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னாள் படை வீரர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் இதில் பங்கேற்றனர். தாய்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மண்ணை சேகரிக்கும் தேசிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக சிற்றறைச் சிறையின் மண்ணை ராணுவத் தளபதி சேகரித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பெருமையை பறைசாற்றும் நினைவுச் சின்னமாக சிற்றறைச் சிறை விளங்குகிறது. காலா பாணி (கருப்புத் தண்ணீர்) என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறை, அரசியல் கைதிகளை தொலைதூரத்தில் உள்ள தீவுகளுக்கு நாடு கடத்த பயன்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது வ.உ.சிதம்பரம் பிள்ளை, விநாயக் தாமோதர் சாவர்க்கர், படுகேஷ்வர் தத், யோகேந்திர சுக்லா உள்ளிட்டோர் இங்கு சிறை வைக்கப்பட்டனர். இன்று, இந்த சிறை தேசியச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது.
பாதுகாப்பு அமைச்சகம் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது
பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்படை தலைமையின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிற்கு (ராஸ் தீவு) ஆகஸ்ட் 4-ஆம் தேதி எடுத்துச் செல்லப்பட்டது. ‘தனித்த மாலுமி சிலை’ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய கடற்படையினர் மரியாதை செலுத்தி, மலர்வளையம் வைத்து, வெற்றிச் சுடருக்கு பாரம்பரிய முறையில் மரியாதை செலுத்தினர்.
கடற்படையைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தையும், துணிவையும் போற்றும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு போரின்போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஐஎன்எஸ் குக்ரி கப்பலின் தளபதி கேப்டன் மகேந்திர நாத் முல்லா, அதன் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய போர்ட் பிளேயரிலிருந்து கிழக்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவில், சுதந்திரப் போராட்டத்தின் போது கடந்த 1943-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ண கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வின் 75-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், ராஸ் தீவிற்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி பெயர் சூட்டினார்.
இந்தத் தீவிற்கு பயணம் மேற்கொண்ட பிறகு, வெற்றிச் சுடர், போர்ட் பிளேயர் படகுத்துறைக்கு திரும்பி வந்தது. இந்த நிகழ்வின்போது கொவிட்-19 நெறிமுறைகள் முழுவதும் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள்