தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் வதோராவில் உள்நாட்டு விமானத் தயாரிப்புக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர்
பாதுகாப்பு அமைச்சகம்
ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் டாடா கூட்டாண்மையுடன் இந்திய விமானப்படைக்கான போக்குவரத்து விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டு விமானத் தயாரிப்புக்கு மிகவும் வலுவூட்டும் வகையில் இந்திய விமானப்படைக்கான போக்குவரத்து விமானத் தயாரிப்புத் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் அக்டோபர் 30, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ, ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56 சி-295எம்டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஒப்பந்தப்படி, பறக்கும் நிலையில் 16 விமானங்கள் தயாரிக்கப்பட்டு பெறப்படும் என்று தெரிவித்தார். எஞ்சிய 40 விமானங்கள் இந்திய விமான தயாரிப்பாளர், டாடா மற்றும் டிசிஎஸ் கூட்டாண்மை மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார். தனியார் நிறுவனம் மூலம் முதல் முறையாக ராணுவ விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.21,935 கோடியாகும் என்றும் இந்த விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பறக்கும் நிலையிலான முதல் 16 விமானங்கள் செப்டம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2025 ஆண்டுக்குள் கிடைக்கப்பெறும். இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவது விமானம் செப்டம்பர் 2026-ம் ஆண்டு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்