சட்டமன்றக் கூட்ட வளாகத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் அந்த வளாகத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் கள் தர்ணா போராட்டம் நடத்தினர்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று 14-12-25 காலை 9:30 மணிக்கு சட்டசபைக் கூட்டத்தொடர் துவங்கியது. சபாநாயகர் பி. எஸ்.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில்,முதலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, மறைந்த முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு கூட்டத்தொடர் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.முன்னதாக கூட்டத்தொடர் துவங்கியதுமே, சட்டமன்ற வளாகத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தரப்பு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் சதாசிவம், மற்றும் சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.கவில் மருத்துவர் ராமதாஸ் தரப்பு, மருத்துவர் அன்புமணி தரப்பு என இரண்டு அணியாகச் செயல்பட்டு வரும் இரா. அருள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி ஒருவர் மட்டுமே தனியாக உள்ள நிலையில் மாற்ற வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மூவரும் தர்ணா செய்தனர்.


கருத்துகள்