பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் நீலகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் நீலகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சார்லஸ். இவர் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது, பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக, அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர்  கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து பணியிடம் மாற்றப்பட்டவர் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இவர் மீதான புகார் தொடர்ந்து விசாரணையிலிருந்து வந்த நிலையில் விசாரணை அறிக்கை, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மூலம், காவல்துறை இயக்குநர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  சார்லஸை பணியிடை நீக்கம் செய்து,கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.

இந்தப் பணியிடை நீக்க உத்தரவு, கோயமுத்தூர் சரக டிஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் கூடுதல் எஸ்.பி. சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டுமென்றும். அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக்கூடாதெனவும் அந்த உத்தரவில் கறாராகக் கூறப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோயமுத்தூர் மாநகர நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புப் பிரிவில் பொறுப்புவகித்த காவல் துறை சார்ந்தவரே அத்துமீறிப் பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவர் கும்ஹார்  (குயவர் - potter) என்ற சாதியை சேர்ந்தவர். இவர் ஒரு சமூக சேவகி. அதனால் ராஜஸ்தான் மாநில அரசால் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.

1992 ஆம் வருடம் குஜ்ஜார் சாதியில் (Gujjar)  9 வயது குழந்தைக்குத் பால்ய திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்த பன்வாரி அக்கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கு தக்க ஆலோசனை கூறினார். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

உயர்சாதியினரின் ஆதிக்க சக்தியை அறிந்த பன்வாரி  “9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்கிறார்கள், அதைத் தடுப்பது என் பணி என போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசிடம், கிராமத்தினர் இது  சாதாரண விழா, திருமணம் ஏதுமில்லை என நாடகம் நடத்தி அனுப்பிவிட்டனர்.

22, செப்டம்பர், 1992 அன்று அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த 5 ஆண்கள் பன்வாரியை அடித்ததுடன், பன்வாரியை அவர் கணவர் முன்னிலையில் பாலியில் பலாத்காரம் செய்தனர். அப்போது அவருக்கு வயது 26. பன்வாரியும், அவரது கணவரும் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினர். இவ்வழக்கு நடந்த 1995 வருடம் வரை 5 முறை நீதிபதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், குற்றவாளிகளை பின்வரும்  காரணங்களை மேற்கோள் காட்டி நீதிபதி விடுவித்தார் பலர் மற்றும் சமூக அமைப்பு ஆதரவுடன் அந்த வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றது.

விஷாகா மற்றும் பலர் Vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் 13, ஆகஸ்ட்,1997 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில வழிமுறைகளை வகுத்தது. (AIR 1997 SUPREME COURT 3011)


உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள்.

விஷாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 

ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும். பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013 (the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) இயற்றப்பட்டு அதன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்