உயர்கல்வி நிறுவனங்களின் இந்திய தரவரிசை 2022-ஐ மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார்
இந்திய தரவரிசை 2022-ஐ மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (15.07.2022) புதுதில்லியில் வெளியிட்டார்.
இதன்படி, ஒட்டுமொத்த செயல்பாட்டு வகைமைக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி, தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போல் பொறியியல் பிரிவில் இது தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி ஜிப்மர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த செயல்பாட்டு தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
தரவரிசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், எதிர்காலத்திற்கு இளைஞர்களை உருவாக்கும் வகையில் துடிப்புமிக்க கல்விமுறையை உருவாக்க, உயர்கல்வி நிறுவனங்கள் பாடுபட்டு வருகின்றன என்றார். மதிப்பீடு, அங்கீகாரம், தரச்சான்று ஆகியவை உயர்கல்வி சூழலில் தரத்தை விரிவுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார். அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது என்றும், இது புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படுவதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விரைவில், ஒவ்வொரு பள்ளிக்கும் அங்கீகாரச் சான்று வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது என்றும் இதில் மாநில அரசுகள் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறிய அமைச்சர், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் அங்கீகார சான்றும், தரவரிசை முறையும் சர்வதேச நிலையைக் கொண்டிருக்கும் என்பதால் இதில் பங்கேற்க வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
கருத்துகள்