தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்பாலாமணி தலைமையிலான குழு,
தகவல் அடிப்படையில் தாம்பரம் ரயில் நிலையத்துக்குச் சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்த போது சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் அந்தப் பிளாட்பாரத்துக்கு வந்ததும், ஏ கோச்சில் ஏறிய தேர்தல் பறக்கும் படையினர் , 26,27,28 ஆகிய படுக்கை எண்களில் பயணம் செய்த. சதீஷ், பெருமாள், நவீன் என்பவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் உடமைகளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது அதில் அதிக அளவு பணமிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களையும் உடமைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் ரயிலிலிருந்து கீழே இறக்கி. அந்த இடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த மூன்று பேரையும் பணத்தையும் தாம்பரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டதாகவும் அப்போது அவர்களிடம் 3,98,91,500 ரூபாய் இருந்தது குறித்து சதீஷ் என்பவரிடம் விசாரித்த போது,
அவர் புரசைவாக்கம் பகுதியிலுள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பினார் என்றும் தெரிவித்ததாகவும். அதைப் போல பெருமாள் என்பவர் திருவல்லிக்கேணியிலுள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் இரயிலில் வந்ததும் தெரியவந்தது.இந்தப் பணம் அனைத்தையும் தங்களின் ஹோட்டல் உரிமையாளர் நயினார் நாகேந்திரன், போட்டியிடும் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுக்கப்பட்டதாக சதீஷ் கூறினார். மேலும் அவர் பி.ஜே.பி-யில் உறுப்பினராக இருப்பதற்கான அடையாள அட்டை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் முகவரி அட்டை ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் சமர்பித்ததையடுத்து செந்தில் பாலாமணி, ஏ.ஆர்.ஓ மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தாம்பரம் காவல் நிலையத்திலும் புகாரளித்ததில், ``நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித கணக்கும் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும் வாக்காளருக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாகவும் கூறிய மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தாரிடம் ஒப்படைக்கிறேன். மேற்படி நபர்களையும் ஆவணங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதையடுத்து தாம்பரம் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், இந்திய தண்டனைச் சட்டம் 171 (c), 171 (E), 171 (F), 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இரயிலில் பணம் கொண்டு சென்றவர்கள் அளித்த தகவலின்படி திருநெல்வேலி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் அவருக்கு சம்மன் கொடுக்க, திருநெல்வேலிக்கு தாம்பரம் காவல்துறையினர் சென்ற போது நயினார் நாகேந்திரனை நேரில் சந்திக்க முடியாததால், அவரின் உறவினரிடம் காவல்துறையினர் சம்மன் கொடுத்துவிட்டு வந்தனர். அச் சம்மனில் ஏப்ரல் 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி நயினார் நாகேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அது குறித்து தாம்பரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், ``நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்து விசாரித்து வருகிறோம். சதீஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அளித்த தகவலின்படி திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனை விசாரிக்க சம்மன் கொடுத்திருக்கிறோம். அதைப் போல இந்தப் பணம், சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் கைமாறியிருக்கிறது. அதனால் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்து சம்மன் கொடுத்தோம். அந்த நிர்வாகி தேர்தல் பிரசாரத்திலிருப்பதால் அவரின் மகன், விசாரணைக்கு ஆஜரானார். அவர், அந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 22-ஆம் தேதி நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்