போலி ஐஎஸ்ஐ முத்திரையைப் பயன்படுத்தி பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் பிஐஎஸ் அலுவலர்கள் இன்று சோதனை மேற்கொண்டனர்
திண்டிவனம் சாலவதி கிராமத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத, குடிநீரை பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலை வளாகத்தில், இந்தியத் தரநிர்ணய அமைவனச் சட்டம், 2016 மீறப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய தர அமைவன (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவினர், இன்று (15 மே 2024) தேடல் மற்றும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது பிஐஎஸ் அதிகாரிகள் திரு ஸ்ரீஜித் மோகன், திரு தினேஷ் ராஜகோபாலன் மற்றும் பிஐஎஸ் ஊழியர்கள் இடம்பெற்ற குழுவினர் இந்த நிறுவனத்தில் போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் குடிநீர் நிரப்பப்பட்ட 189 எண்ணிக்கையிலான 2 லிட்டர் பாட்டில்கள், 180 எண்ணிக்கையிலான 500 மில்லி லிட்டர் பாட்டில்கள், 106 எண்ணிக்கையிலான 20 லிட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுமார் 3,00,000 எண்ணிக்கையிலான போலியாக ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட லேபிள்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிறுவனத்தின் மீது இந்தியத் தர நிர்ணய அமைவனச் சட்டம் 2016-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத் தலைவர் திருமதி ஜி.பவானி தெரிவித்தார். இத்தகைய குற்றத்தில், முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம், 2016, பிரிவு 29-ன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2,00,000/-க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அல்லது ஒட்டப்படும் பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
போலியான நிறுவனங்கள் பற்றி பொது மக்களுக்கு தெரியவந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். இத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.
கருத்துகள்