10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி ஊக்கமளித்தல்10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்

சிறு, விளிம்புநிலை மற்றும் நிலமில்லா விவசாயிகளை, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் பொருளாதார வலிமையை மேம்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அவர்களின் சந்தை தொடர்புகளை அதிகரிக்க முடியும்.

இதை மனதில் கொண்டு, “10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்” என்னும் மத்திய துறை திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. நாட்டில் 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி, ஊக்குவிக்க தெளிவான திட்டமிடல் மற்றும் உறுதியான வளங்களுடன், ரூ 6,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்கள் வளரும் இடங்களில் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு சந்தை அணுகலை கிடைக்கச் செய்யவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வளர்த்தெடுக்கப்படும்.

சிறப்பான செயல்பாடுகள், விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவதற்காக “ஒரே மாவட்டம் ஒரே பொருள்” தொகுப்புக்கு ஊக்கமளிக்கப்படும். இந்தத் திட்டத்தில், செயல்படுத்தும் முகமைகளின் கீழ் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் நிறுவப்படுகின்றன.

தற்போதைக்கு, ஒன்பது செயல்படுத்தும் முகமைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவை: சிறு விவசாயிகள் வேளாண்-வர்த்தக கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், நபார்டு, நாஃபெட், வடகிழக்கு பிராந்திய வேளாண் விற்பனைக் கழகம், தமிழ்நாடு-சிறு விவசாயிகள் வேளாண்-வர்த்தக கூட்டமைப்பு, ஹரியானா சிறு விவசாயிகள் வேளாண்-வர்த்தக கூட்டமைப்பு, நீர் கொட்டகை வளர்ச்சி துறை- கர்நாடகா மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக மதிப்பு சங்கிலிகள் வளர்ச்சி அமைப்பு ஆகியவையாகும்.

2020-21-ஆம் ஆண்டில், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கத்திற்காக 2200 பொருள் தொகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவற்றில் 100 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் இயற்கை விவசாயத்தை சார்ந்தும், 100 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் எண்ணெய் வித்துக்களை சார்ந்தும் உள்ளன. நாட்டிலுள்ள 115 வளரத்துடிக்கும் மாவட்டங்களில் நடப்பாண்டில் 369 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்படும்.

சந்தை மற்றும் வேளாண் மதிப்பு சங்கிலி உள்ளிட்டவற்றில் இணைக்கக்கூடிய சிறப்பு வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை நாஃபெட் எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு உருவாக்கும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஐந்து தேன் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை நாஃபெட் உருவாக்கியுள்ளது.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு தலா ரூ 18 லட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும். இதோடு, ஒரு விவசாயிக்கு ரூ.2,000 என்னும் அளவில் மானியமும் (ஒரு வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூ.15 லட்சத்திற்கு மிகாமல்), வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு ஒன்றுக்கு ரூ 2 கோடி கடன் உத்தரவாத வசதியும் வழங்கப்படும். இவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக்காக தேசிய திட்ட மேலாண்மை முகமை செயல்படுகிறது.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் மூலம் தற்சார்பு வேளாண்மை சாத்தியமாகி, வேளாண் உற்பத்தி பெருகி, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

மேற்கண்ட தகவல்கள், சென்னை வேளாண் விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகத்தின் (வேளாண் ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத் துறை, இந்திய அரசு), மண்டல அலுவலகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்