சிவகங்கை மாவட்டம் கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 31 ஆயிரம் சதுரடியில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியக் கட்டிட. அமைப்பில் உருவான கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் தற்போது பார்வையிடுகின்றனர்.
தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டதண் மூலமாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் கூறுகளை உலகப், பொதுமக்கள் அணைவரும் காண்டு களிக்கும் வகையில் தமிழ்நாடு மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகத்தில் ஆறு பிரிவுகளில் 'மதுரையும் கீழடியும்', 'வேளாண்மையும் நீர் மேலாண்மையும்', 'கலம் செய்கோ', 'ஆடையும் அணிகலன்களும்', 'கடல் வழி வணிகம்', 'வாழ்வியல்' எனும் ஆறு தலைப்புகள் அடிப்படையில் தனித்தனிக் கட்டிடங்களில் தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழர்களின் வாழ்வியல் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, கலாச்சாரம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டிருந்த வணிகத் தொடர்பினைப் பறைசாற்றும் வகையில், வெளிக்கொண்டு வந்த நிலையில் உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில், கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி ஒலிக் காட்சியுடன் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அறிய மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
18 ஆயிரம் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகப் பண்பாட்டின் பண்டைய கால ஆற்றங்கரை நாகரிக வாழ்வியலைத் தேடி மேற்கொண்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், யானை தந்தத்தாலான பொருட்கள், மற்பாண்டங்கள், விரலளவு பானை, தாயக்கட்டை ஆட்டக்காய்கள், முதுமக்கள் தாழிகள், 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் சிற்பம், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய பொருட்களின் பாதுகாப்பிற்கான நவீன விளக்குகளுடன் கூடிய கண்ணாடிப் பேழைகள் உலகத் தரத்தில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் வெளியில் நான்கு மாடங்களுடன் கூடிய தெப்பக்குளம், கல் மண்டபமும் , நுழைவு வாயிலில் தமிழகத்தின் முக்கிய அகழாய்வுத் ஸ்தலங்களான சிவகளை, கொடுமணல், அரிட்டாபட்டி, மயிலாடும்பாறை உள்ளிட்ட 21 ஸ்தலங்கள் பற்றிய வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது. பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பொது மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.
க்யூஆர் கோடு மூலம் வெளிநாடுகளிலுள்ள மக்களும் கண்டு ரசிக்கலாம்
கீழடி அருங்காட்சியகம் குறித்து தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் கூறுகையில், கீழடி மற்றும் கொந்தகைப் பகுதியில் நடைபெற்ற நான்கு முதல் எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த 18 ஆயிரம் தொல்பொருட்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரித்து காட்சிப்படுத்தியுள்ளோம்.
இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் ஆறு கட்டிடங்களில் கீழடி அருங்காட்சியகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வை நேரடியாக வந்து பார்க்க இயலாத மக்கள் இந்த அருங்காட்சியகத்தின் மூலம், அகழ்வாய்வில் எவ்வாறு தொல்பொருட்கள் கிடைத்ததென்பதைப் பார்க்கும்படி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் தொல்பொருட்களை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் 'கீழடியும் வைகையும்' என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டி அனிமேஷன் உள்ளிட்டவற்றால் காணொளிக் காட்சியும் மற்றும் ஒலி வடிவில் கேட்கும் படியும் தொல்லியல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.
கீழடி அருங்காட்சியகத்தில் இருக்கக்கூடிய தொல்பொருட்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் இங்குள்ள க்யூ ஆர் கோடுகளை பயன்படுத்தி கண்டு ரசிக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை இணைந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்
அடுத்த கட்ட அகழாய்வில் மாநில தொல்லியல் துறை மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அகழாய்வு செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்குமென்று கூறுகிறார். முன்னாள் மத்திய தொல்லியல் துறை அதிகாரியும் அகழ்வாய்வை முதலில் துவங்கியவருமான அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடி அருங்காட்சியகம் குறித்து கூறுகையில், "கீழடியில் அருங்காட்சியகம் நல்ல முறையில் சிறப்பாக அமைந்துள்ளது.
அருங்காட்சியகத்தில் ஒரு சில இடங்களில் தொல்பொருட்களின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. எனவே அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் காட்சிபடுத்த மாநில தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழடியில் மத்திய தொழில்துறை மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த 5200 பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் படி சென்னையிலுள்ளன. அவற்றைப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை ஒப்படைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டுமென்றார்
கீழடி அருங்காட்சியத்தை பார்க்க வந்திருந்த மாணவர்களில் ஒருவர் கூறியது "பண்டைய தமிழர்கள் வாழ்ந்த முறை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவில் மிக சிறப்பாக கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
அருங்காட்சியகம் வரும் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் தொல்லியல் பொருட்களை கண்டு ரசிப்பதும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஆறு கட்டிடங்களில் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பண்டைய தமிழர்கள் எவ்வாறு வணிகம் செய்தார்கள் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தும் கடல் வணிகம் குறித்த கட்டிடம் தான்.
அங்கு பண்டைய தமிழர்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.அவர்கள் வணிகத்திற்காக பயன்படுத்திய பொருட்கள், நாணயம், கடல் வழிப் பயணக் கருவிகள் உள்ளிட்டவை வியப்பூட்டுகின்றது,
பண்டைய காலத்தில் பெண்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்திய யானை தந்தத்தாலான சீப்பு, கண்ணுக்கு பயன்படுத்தப்படும் மை, அணிகலன்கள், முத்துமணி, தங்கம், பாசி, உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு மிகவும் அருமை'' என்றார்.
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களில்
பண்டைய தமிழர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்பது அவர்கள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள், விலங்குகளின் எலும்புகள், இரும்பு ஆயுதங்கள், நாணயங்கள், பானை என ஏராளமான பொருட்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டாயம் கீழடி அருங்காட்சியகத்தை அவசியம் பார்வையிட வேண்டும். கீழடியை பார்க்கும் மாணவர்களுக்கு தொல்லியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் மேலோங்கும்.
கீழடி அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித உறவுகளைப் பிரிந்து விட்டு வருவது போல் உணர்வு ஏற்படுகிறது" என்று பல மணவர்கள் தெரிவித்தார்கள்மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தனது கருத்தாக " "மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன்.
ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடரசு.
ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது.
வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்" என தமிழ்நாட்டின் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, பாரம்பரிய விடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக அரங்கில் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்திரளாய் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.
கருத்துகள்