தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பத்மஸ்ரீ மரு.ஜி.வேலுச்சாமிக்கு பாராட்டு விழா
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகமும் இணைந்து, சித்த மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. வேலுச்சாமிக்கு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பாராட்டு விழா நேற்று ( 11.04.2023 ) நடத்தியது. மரு. ஜி. வேலுச்சாமி சித்த, ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமத்தின் தலைமை இயக்குநராகவும், மைய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (சித்தா) இயக்குநராகவும் பணியாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் இயக்குநர், திரு. S. கணேஷ் ஐஏஎஸ், மரு. ஜி. வேலுச்சாமிக்கு கிடைக்கப் பெற்ற அங்கீகாரம் சித்த மருத்துவ முறைக்கே கிடைத்த அங்கீகாரம் என்றும், சித்த மருத்துவத் துறையின் மைல் கல்லாக தமிழகத்தில் அகில இந்திய சித்தா நிறுவனம் மற்றும் பழனியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமையப் போவதாகவும் தெரிவித்தார். விழாவிற்கு தலைமை வகித்த பேராசிரியர். மரு. R. மீனாகுமாரி, இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு), சித்த மருத்துவ மூத்த ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சித்த மருத்துவம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்பதை சுட்டிகாட்டினார். மேலும் மரு. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் புற்றுநோயை குணப்படுத்துவதில் வீரியமிக்க பல சித்த மருந்துகளை சீரிய முறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
கருத்துகள்