சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏபரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்ட விழாவில் அவர் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தில் பல அம்சங்கள் உள்ளன. அதன் வரைவு 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனை 1950 ஆம் ஆண்டில் நாம் ஏற்றுக் கொண்டோம். இந்த அரசியலமைப்புச் சட்டம் அப்படியே இருக்க வேண்டும் என்றால், அது உருவாக்கப்பட்ட போதிருந்த மக்கள் தொகை விவரம் அப்படியே இருக்க வேண்டும். மக்கள் தொகை விவரம் மாற்றப்பட்டால், அரசியலமைப்பு இருக்காது.
மக்கள்தொகை விவரங்கள் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்டால், பாரதிய சம்பிரதாயத்தையும் பாரதிய தர்மத்தையும் பின்பற்றுபவர்கள் அதே பாரம்பரியத்தில் இருக்க வேண்டும். ஒரு நீதிபதி என்ற முறையில் இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார். மேலும் இக் கருத்தை தெரிவிக்கும் முன் பார்வையாளர்களிடம் "தனது இந்த கருத்துக்கள் சற்று சர்ச்சைக்குரிய வகையில் மாறக்கூடும்" எனவும் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'அரசியலமைப்பு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போதிருந்த மக்கள் தொகை விவரம் அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகள் இத்தகைய மனநிலையில் இருந்தால் அரசியலமைப்பு நிலைத்திருக்காது" என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்