டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"நமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் ஆழ்ந்த ஞானமும், உறுதியான தலைமையும் மிகவும் பெருமைக்குரியவை. ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலராக அவரது முயற்சிகள் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அன்னாரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” என்றார் மேலும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்
நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.12.2023) மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) ஏற்பாடு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் உரையாற்றினார்
நாட்டின் பொருளாதாரம், தேசத்தின் மீது பிற நாடுகளி்ன் மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது: குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர்
நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் நினைவாக 1969-ம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி), டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று (02-12-2023) உரை நிகழ்த்தினார். "பொருளாதார வல்லரசாக இந்தியாவின் எழுச்சி" என்பதே இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் ஆகும். புது தில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் (ஆகாஷ்வாணி) உள்ள ஒலிபரப்பு மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் பொருளாதாரம், அதன் உலகளாவிய மரியாதை மற்றும் நம்பகத்தன்மை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றார். இன்று, உலக நாடுகள் இந்தியாவின் கருத்துக்களைக் கேட்கவும் அதன் கருத்துக்களை மதிக்கவும் விரும்புகின்றன என்று அவர் கூறினார். ஒட்டுமொத்த உலகமும் இந்திய இளைஞர்களின் திறன்களையும் அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது என்று அவர் கூறினார். ஆனால் தற்போது அது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். 140 கோடி குடிமக்களின் கடின உழைப்பு மற்றும் திறமையான தேசத் தலைமையின் காரணமாக நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது என அவர் தெரிவித்தார். நிலவின் தென் துருவத்தை அடைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றில் நாடு பல சாதனைகளைப் படைத்துள்ளது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்துப் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், 107 அத்தியாயங்களின் பயணத்தை இந்த நிகழ்ச்சி நிறைவு செய்துள்ளது என்றார். மக்களுடன் தொடர்பு கொள்ள வானொலியைத் தேர்வு செய்துள்ள பிரதமர், அதன் மூலம் தகவல் தொடர்பு புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்தார். மனதின் குரல் மக்களின் குரலாக மாறி மக்களின் இதயங்களைச் சென்றடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
அமிர்த காலதத்தில் இந்தியாவை உச்சத்திற்கு கொண்டு செல்லும் சக்தி நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், நாட்டின் ஒவ்வொரு நபரும் தங்கள் கடமைகளைச் செய்தால் இந்தியா எழுச்சி பெற்று முதன்மை நாடாக உருவெடுக்கும் என்றார்.
முன்னதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா வரவேற்புரையாற்றினார். பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரி திரு கெளரவ் திவிவேதி, அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு முதன்மை தலைமை இயக்குநர் டாக்டர் வசுதா குப்தா, பிரசார் பாரதி மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாள் டிசம்பர் 3-ம் தேதி வருவதையொட்டி 1969-ம் ஆண்டு முதல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.
முதலாவது உரை 1969-ம் ஆண்டில் இந்தி இலக்கியவாதியும் சிந்தனையாளருமான டாக்டர் ஹசாரி பிரசாத் திவேதியால் நிகழ்த்தப்பட்டது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, முன்னாள் பிரதமர்கள் அடல் பிகாரி வாஜ்பாய், சந்திரசேகர், விபி சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், இலக்கியவாதிகள் திருமதி மகாதேவி வர்மா, ஹரிவன்ஷ் ராய் பச்சன், டாக்டர் வித்யாநிவாஸ் மிஸ்ரா, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கடந்த காலங்களில் இந்த விரிவுரையை நிகழ்த்தி உள்ளனர்.
கருத்துகள்