ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அல் - குவைதாவுக்கு நெருக்கமான வங்கதேசப் பயங்கரவாதி உள்ளிட்ட எட்டு நபர்களை,அசாம் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
அதன் காரணமாக நாடு முழுதும் நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா அமைப்பின் கிளை, 'அன்சாருல்லா பங்க்ளா டீம்' எனும் அமைப்பு, வங்கதேசத்தில் செயல்படுகிறது. அதன் தலைவராக ஜசிமூதின் ரஹ்மானி உள்ளார்.
இவரது நெருங்கிய உதவியாளரான முஹமது பர்ஹான் இஸ்ராக், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கியமான ஹிந்து அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இது தொடர்பான ஆலோசனையில் அன்சாருல்லா குழுவின், 'ஸ்லீப்பர் செல்கள்' ஈடுபட்டுள்ளதாக அசாம் காவல் உளவுத் துறையினருக்கு சமீபத்தில் தகவல் அளித்ததன் காரணமாக
கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து, அசாமில் பேரூந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, மாநில சிறப்பு அதிரடிப்படைக் காவலர்கள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்ட போது, வங்கதேசத்திலிருந்து முஹமது சாப் ஷேக், (வயது 32), என்ற நபர் அசாம் வந்து தங்கியிருந்து சிலரைச் சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பின்தொடர்ந்ததில், மேற்கு வங்காளத்திலும் அதைத் தொடர்ந்து கேரளாவிலும் சென்று வேறு சிலரை சாப் ஷேக் சந்தித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூன்று மாநிலங்களில் அவர் சென்ற இடங்களில் அசாம் அதிரடிப் படையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தியதன் முடிவில், சாப் ஷேக்கை அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்