தேர்தல் ஆணையம் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் 2022 ஜுலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 62-வது பிரிவின்படி, தற்போதுள்ள குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்குள், அதற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
எனவே குடியரசு தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை ஜூன் 15-ம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் 30-ம் தேதி. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 2-ம் தேதி. தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும் வாக்குகளை எண்ணும் பணி ஜூலை 21-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோர் குறைந்தபட்சம் 50 எம்பிக்கள்/ எம்எல்ஏக்கள் முன்மொழிதலுடன் 50 எம்பிக்கள்/ எம்எல்ஏக்கள் வழிமொழிதலுடனும் நேரடியாகவோ அல்லது முன்மொழிந்தவர் அல்லது வழிமொழிந்தவர்களில் ஒருவர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தேர்தல் நாளன்று நாடாளுமன்ற வளாகத்திலும் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டபேரவை வளாகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
கருத்துகள்