புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி உள்ளிட்ட மலர்கள் தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது.
மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.
இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும்.
2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.
கருத்துகள்