பாரம்பரிய பொருட்கள் சர்வதேச பேக்கிங் தர நிலைக்காக தேர்வு: ஐஐபி சென்னை மையம்

“சான்றளிக்கப்பட்ட பேக்கேஜிங் பொறியாளர்” ஆன்-லைன் படிப்பு இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் – ஐஐபி சென்னை மையம் துவக்குகிறதுதமிழகத்திலிருந்து 5 உட்பட, 75 பாரம்பரிய பொருட்கள் சர்வதேச பேக்கிங் தர நிலைக்காக தேர்வு

இந்திய பேக்கேஜிங் நிறுவனத்தின் சென்னை மையம், இந்தியாவிலேயே முதல் முறையாக ”சான்றளிக்கப்பட்ட பேக்கேஜிங் பொறியாளர்” என்ற ஓராண்டு ஆன்-லைன் படிப்பை துவங்கி உள்ளது என்றும், இந்தப் படிப்பில் பொறியியல் கல்வி முடித்தவர்களும், பொறியாளராகப் பணியாற்றுபவர்களும் சேரலாம் என்றும் இந்திய பேக்கேஜிங் நிறுவனத்தின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் தன்வீர் அலம் இன்று சென்னையில் தெரிவித்தார்.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தப் படிப்பில் சேர்பவர்களுக்கான வகுப்புகளை இம்மாதம் 15-ந் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படிப்பு, இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கொண்டாடும் “ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்” என்ற பிரதமரின் முன்முயற்சியின் கீழ் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு பொருளை உற்பத்தி செய்த பின்னர், அதன் தன்மைக்கேற்றவாறு தரமான பேக்கிங் செய்வதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்த, பேக்கிங் குறித்த தொழில்முறை திறன்களைக் கொண்ட பேக்கிங் பொறியாளர்களை உருவாக்குவதே இந்தப் படிப்பின் நோக்கமாகும். 20-க்கும் அதிகமான சர்வதேச கல்வியாளர்கள் இந்தப் படிப்பில் இணைந்து, மாணவர்களிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து, அவர்களுக்கு கற்றுத் தர உள்ளனர்.

தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் இந்திய பேக்கேஜிங் தொழிலில், திறன் மிக்க தொழிலாளர்கள், பணியாளர்கள் கிடைப்பது என்பது தொடர்ச்சியான சவாலாக இருப்பதாக எக்சிம் வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இந்திய பேக்கேஜிங் தொழிலுக்கு தற்போது 35,000-க்கும் கூடுதலான பேக்கேஜிங் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும், இவற்றில் 1.5 விழுக்காடு தேவைதான் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொழில்திறன் மிகுந்த பேக்கேஜிங் வல்லுனர்கள் பற்றாக்குறையானது இந்தத் தொழிலில் உயர்ந்த நிர்வாக பொறுப்புகளிலும் நிலவுகிறது. சான்றளிக்கப்பட்ட பேக்கேஜிங் பொறியாளர் படிப்பு, இந்தத் துறையில் காணப்படும், திறன் மிக்க பணியாளர் மற்றும் வல்லுனர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பேக்கேஜிங் நிறுவனம், நாடெங்கிலும் 75 பாரம்பரிய பொருட்களை தேர்வு செய்து, அவற்றின் பேக்கிங்களை சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உள்ளது. இந்த முயற்சி அம்ருத் மகோத்சவ் கொண்டாட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருச்சி-வாழைப்பழம், கிருஷ்ணகிரி-மாம்பழம், தஞ்சாவூர்-பொம்மை, ஸ்ரீவில்லிப்புத்தூர்-பால்கோவா, கோவில்பட்டி-கடலை மிட்டாய் ஆகியவற்றை தமிழக அரசு இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றின் பேக்கிங்களை உலகத் தரத்தில் வடிவமைப்பதற்காக இந்திய பேக்கேஜிங் நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், சென்னை இந்திய பேக்கேஜிங் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் திரு.ஆர்.ஆர்.குமார், துணை இயக்குனர் திரு.ஆர்.பொன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா