சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்


இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறை அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாத நாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும் லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திரு சுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தை தோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம் பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின் கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களை வன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவா ஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல் கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல் தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்கு ஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்கு வெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவா வற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றி பேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியான கலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம் வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த 1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளை தொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டு வந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக் அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில் 1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைது செய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து 1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னை மாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம் ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமி சாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி என அறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து கேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்து அவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வை அவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேச அகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களை நடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல் சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்கு தலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின் கூறினார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரது பெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்கு வைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளை பராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காக போராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்ட போரில் அவர் உயிரிழந்தார்.

சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலி குறித்தும், உதவிப் போராசிரியர் சி. ஜெயவீரதேவன் விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார் என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின் முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்க உடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்பு சுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த 1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்த பொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர் ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்து அவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன் சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாக திகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.

தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள் தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்று காலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பல தலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களை கவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திர இயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடு முழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன. 

சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின் களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.                            சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்  திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சுதந்திரப்போராட்ட தியாகியாக இருந்து காலம்சென்ற ஜெயவாணி அம்பலம் மனைவி  தனபாக்கியம் அம்மாவின் வயது-87 ஆகும் நிலையில் 



அவர்களுக்கு   75-வது சுதந்திர தின  விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் ஜெயந்தி அவர்களால் சுதேசிக் கதராடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். இதில் விடுதலையின் மூத்த  செய்தியாளர் திருக்கோஷ்டியூர் தனபாலன் திருக்கோஷ்டியூர் வருவாய் ஆய்வாளர் செல்வசேகர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கள் உடனிருந்தனர்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட நடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கிய பேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.

சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி.ஜெயவீரதேவன்.

தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்