மாநில, மத்திய அரசுகளுக்கிடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன்மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

தமிழகத்தை மேம்படுத்துவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதிலும், தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மற்றும் சென்னை பத்தி்ரிகை தகவல் அலுவலகம் ஆகியவை இணைந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, கொரோனா தொடர்பான நூல் வெளியீடு, கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்  மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், “தலைசிறந்த ஆட்சியை தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நம் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமராக திரு.நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் இதுவரை கண்டிராத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் குறைவாக இருந்தன. குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் ஊரடங்கு போன்ற சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமானது.

நாட்டில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விநியோக நடைமுறையில் மத்திய அரசு எந்த மாநிலத்தையும் பிரித்துப் பார்க்காமல் பாரபட்சமின்றி சமமாக பாவித்து தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. அதனடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சி.எஸ்.ஆர். எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வின் கீழ் உள்ள நிதியின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் கொரோனா சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள தமிழக அரசு வகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், ”கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற 104 நாட்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மத்திய அரசால் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அந்த 25 சதவீத தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கினால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கு விரைவில் எட்டப்படும். தமிழகத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வழிவகை இருந்தும் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே, அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி வழங்கினால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்று திரு மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் திரு.டி.எஸ்.செல்வ விநாயகம், யுனிசெஃப் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தொடர்பு அதிகாரி மற்றும் பொறுப்பு அலுவலர் திரு சுகதா ராய், ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த 75 ஆவது சுதந்திர திருவிழா புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கண்காட்சியை சுற்றி வந்து பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த பதிப்பகத்துறையின் புத்தக விற்பனை அரங்கத்தையும் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பதிப்பகத் துறை சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று - வரலாறு, அறிவியல் மற்றும் சமூக குறியீடுகள் பற்றிய நூல் ஒன்றை மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் வெளியிட மாநில அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

75 ஆவது சுதந்திர திருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் அம்ரூத் மகோத்சவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான 10 காணொலி காட்சி பொறுத்தப்பட்ட வாகனங்களை (வீடியோ வேன்) அமைச்சர்கள் இருவருமே கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த வாகனங்களில் கொரோனா தொற்றுப் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வாகனங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ள கொரோனா விழிப்புணர்வு கைப்பிரதிகளையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இந்த விழாவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் திரு.எஸ்.வெங்கடேஷ்வர் விழாவுக்குத் தலைமை வகித்தார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்