காஞ்சித் தலைவன் 113 பிறந்த நாள் விழா சிறப்பு

தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது செய்தியில் 'பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை சட்டமாக்க, நீதிக்கட்சி வழங்கிய


சமூகநீதி மக்கள்நல ஆட்சியை மீண்டும் நிறுவ திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளில் அவர் வகுத்த கொள்கைப் பாதையில் என்றும் பயணிப்போம் என உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.


 -நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவரது செய்தியில் #HBDArignarAnnaஅன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்! எனத் தெரிவித்துள்ளார் .                     அரசியலில் பல தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக்காப்பது,  அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர். முன்னால் முதல்வர் டாக்டர் சி.என்.அண்ணாதுரைஇனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்.. தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் அழிந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டும் என்று விரும்பியவர்..

அதிகம் பேரால் பேசப்படும் இந்திதான் இந்த நாட்டின் தேசிய மொழி என்று டெல்லி அறிவிக்க முயன்ற போதெல்லாம் தடைக்கல்லாய் திகழ்ந்தவர்.


பெரும்பான்மைக்குத்தான் முதன்மை என்றால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள  எலியை தேசிய விலங்காக அறிவிக்காமல் புலியை அறிவித்தது ஏன் என்று வினா எழுப்பியவர்.. காக்காயை தேசிய பறவையாக அறிவிக்காமல் மயிலை அறிவித்தது ஏன் என்றும் கேட்டவர்..

இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும் உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டு அதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்தவர்.ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் நாசமே மிஞ்சும் என்று எச்சரித்த தீர்க்கதரிசி.

தமிழினத்தின் மாண்பு மங்கிப்போய்விடக்கூடாது என்று மாநில சுயாட்சியை வற்புறுத்தி அதற்கான உரிமை களை மீட்க போராடியவர்.. அதனால்தான் இன்று தமிழகம் பல விதங்களில் முன்னேறியி ருக்கிறது..


மாநில சுயாட்சி அதிகாரத்தை கோட்டை விட்டதால்தான் இன்னும் பல மாநிலங்களை மத்திய அரசு தன் கோரக்கரத்தால் அடக்கியாண்டு கொண்டிருக்கிறது  அதிலும் வடகிழக்கு மாநிலங்களின் கதை இன்னமும் பரிதாபம்.

அண்ணா முதலமைச்சர் பதவியேற்க அவரது நுங்கம் பாக்கம் வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ரெடியாகிறார்.

நம்மையும் அழைத்துச் செல்வார் என்று மனைவி ராணி அம்மா மற்றும் குடும்பத்தினர் தயாராக இருக்க. அண்ணாவோ, யாரையும் அழைக்காமல் ஒரு பழைய கைத்தறித் துண்டை தோளில் போட்டுக்கொண்டு காரில் ஏறி, பதவியேற்கப் புறப்பட்டு போயேவிடுகிறார்

முதலமைச்சர்கள் பதவியேற்பதை அந்த அரங்கில் உள்ளவர்கள் மட்டுமே அன்றைக்கு கேட்கமுடியும்- ஆனால் அண்ணா முதலமைச்சராக பதவியேற்கும்போது, ''விழா அரங்கின் வெளியே கட்டுங்கடா ஒலிபெருக்கிகளை. என் பதவி பிரமாணத்தை என் சமான்ய மக்களும் கேட்கட்டும்'' என உத்தரவிட்டார்..

அண்ணாவின் மீது உயிரையே வைத்திருந்து அவர் பெயரிலேயே தனி இயக்கம், கொடி கண்ட எம்ஜிஆர் இதை மனதில்வைத்தே தாம் முதலமைச்சராக முதன் முதலில் பதவியேற்றபோது மக்கள் முன்னிலை யிலேயே அதனை செய்துகாட்டினார்..


இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழின் குரல்வளையை கடித்து குதறிவிடும் என்று தீர்க்கமாக நம்பியவர் அண்ணா..அதனால்தான் இந்தி திணிப்பை விரட்டி விரட்டி வேட்டையாடச் சொன்னார்.

இந்தியா முழுக்க பள்ளிகளில் இங்லீஷ் கற்பிக்கப்படும்போது அது ஏன் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது? உலகத்தொடர்புக்காக இங்கிலீஷையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்?

பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும் சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? பெரிய கதவை வைத்துவிட்டால் அதில் சிறிய நாயும் பெரிய நாயும் வந்துபோகப்போகின்றன என்று சொன்னவர் அறிஞர் அண்ணா... 

அண்ணா... இது வெறும் பெயரல்ல.. ஒரு சரித்திரம், படிக்க,  கேட்க  வியக்கவைக்கும் ஒரு சாமான்யனின்  மகத்தான வரலாறு..

காஞ்சிபுரத்தில் ஒரு எளிய நெசவாளி குடும்பத்தில் பிறந்தவர். நகராட்சியில் எழுத்தர் வேலை பார்த்தவர்.

இந்த சாமான்யன்தான் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து?

நாட்டுக்கே சுதந்திரம் வாங்கித் தந்தோம் என்று சொல்லி நாடு முழுவதும் அரசியல் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரசுக்கு எதிராக..

பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் கோலேச்சிய காலகட்டத்தில்.

1957ல் தனது தம்பிமார்களோடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முதன் முறையாக சந்தித்தபோது அண்ணாவின் இயக்கத்திற்கு வெற்றி கிடைத்தது வெறும் பதினைந்தே இடங்களில்.. 


எவனும் எவனுக்கும் அடிமையில்லை என்ற சித்தாந்தத்தில் சாமானிய மக்களுக்கும் கல்வி அரசு வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று சொல்லி சாதித்தும் காட்டியவர்..

இன்று அவரைப் பார்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எள்ளி நகையாடுவோருக்கெல்லாம் அரசியல் பாதையை எப்படி போட வேண்டும் என்று இவரே பாடமாக அமைந்து போனார்..

இந்த மாநிலத்தை அவர் ஆண்டது ஒன்றரை ஆண்டு மட்டுமே.. ஆனால் அரை நூற்றாண்டை கடந்த பிறகும் அவரின் தாக்கமே ஆட்சிக் கட்டிலில் தொடர்கிறது..

மாநில சுயாட்சியின் மங்கா ஒளிவிளக்கு பேரறிஞர் அண்ணா..


உற்சாகம் போட்டியும்,பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்றும் முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது..செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.

சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.

அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்; அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்; ஆள்பவர்கள் பெண்கள்.

விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.

புகழை நாம் தேடி சொல்லக்கூடாது; அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.

ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது.

சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம் ஆனால் வளமான பொது அறிவு பெற்று இருக்கிறான். எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்கு தெரியும்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

பிறருக்கு தேவைப்படும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் முடிந்தவுடன் 'கெட்டவர்களாகி' விடுகின்றோம்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

மறப்போம்; மன்னிப்போம்,

கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு,

எங்கிருந்தாலும் வாழ்க,

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பிரபலமான வரிகள் அண்ணாவினுடையதே..

15 செப்டம்பர் 1909 ஆம் ஆண்டு பிறந்தார், இந்நாளில் அவரது பொன்மொழிகளை போற்றுவோம் வாழ்த்தி மகிழ்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா