திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற நிகழ்வில் அவர் நடித்த குசேலர் படத்தின் கதை போல் பெருமை பொங்கப் பகிர்ந்து டெல்லியிலும் தனது நண்பர் ராஜ் பகதூரின் பெயரை உச்சரித்து மகிழ்ந்த நிகழ்வு.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் 1970 ஆம் ஆண்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக ராஜ் பகதூரும், நடத்துனராக சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தும் ஒரே நாளில் பணிக்குச் சேர்ந்து. பயனச்சீட்டுக் கொடுக்கும் போது பயணிகளுக்கு பாக்கி சில்லறையைக் கொடுக்கும் போதும் அவரது ஸ்டைலைப் பார்த்தும், வேகமான நடை, தலையை கோதி விடும் ஸ்டைல் ஆகியவற்றையும் கண்டறிந்து அப்போதே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் போக்குவரத்து ஊழியர்கள் போடும் நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரமேற்று நடித்த போதுதான் ரஜினிக்குள் இருந்த நடிப்புத் திறமை ராஜ் பகதூருக்கு தெரிந்தது. இதுகுறித்து ரஜினியிடம் சொன்ன போது அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டுக்கு போய் நடிப்பில் பயிற்சி பெறுமாறு ரஜினியை கட்டாயப்படுத்தி ராஜ் பகதூர் தான் அனுப்பினார்.
ரஜினியின் ஸ்டைலை அப்போதய எந்த நடிகரும் பயன்படுத்தாத நிலையில் இயக்குநர் கே பாலசந்தர் கண்டறிந்து வாய்ப்பு வழங்கவே அன்று தொடங்கிய பயணம் 70 வயதிலும் நிற்காமல் கதாநாயகனாகவே தொடர்ந்து நடிக்கிறார். உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் பெங்களூர் சென்றால் ராஜ் பகதூரைச் சந்திக்காமல் ரஜினி காந்த் வரமாட்டார். ஆண்டுதோறும் இமயமலைக்குச் செல்லும் போது ராஜ் பகதூருடன் செல்லும் ரஜினிகாந்தின் தரையில் அமர்ந்து கூடச் சாப்பிட தயங்கமாட்டார் என ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
அது போல்தான் ராஜ் பகதூர் குறித்து சிலாகித்து கொள்வார் ரஜினிகாந்த். தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வாங்கிய நடிகர் ரஜினிகாந்திற்கு டெல்லியில் திரைப்பட வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதைப் குடியரசு துணைத் தலைவரிடம் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் விழா மேடையில் பேசும் போது "இந்த விருதை வாங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.
தாதா சாகேப் பால்கே விருது கொடுத்தமைக்கு மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் இந்த விருதை எனது குரு கே பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அடுத்தது தந்தை போல் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து ஆன்மீகத்தை என்னுள் புகுத்திய எனது சகோதரர் சத்யநாராணயா கெய்க்வாட்டுக்கு நன்றி. எனது நண்பரும் என்னுடன் பணியாற்றிய சக ஊழியருமான டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி.
நான் பஸ் கன்டக்டராக இருந்த போது அவர்தான் என்னுள் இருந்த நடிப்புத் திறமையை கண்டறிந்து என்னை சினிமாவில் இணைந்து நடிக்க ஊக்குவித்தார்" எனத் தெரிவித்தார். உச்சத்திற்குப் போனாலும் தன்னை உயர்த்தி விட்ட நபர்களை மறக்கக் கூடாது என நினைவுப்படுத்தி விட்டதுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ் பகதூருக்கு பெருமையும் சேர்த்தார். ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் வழக்கம் போல் காதில் விழுந்தது
நியாயப்படி கமலுக்கு தான் கொடுக்க வேண்டும். எதற்கு ரஜினிக்கு? இந்த கேள்வி பலரையும் தூங்க விடாமல் எரிச்சலடையச் செய்திருக்கிறது.
ரஜினியும் கமலும் ஒரே தமிழ்த்திரை என்கிற தளத்தில் பயணித்த கமல் குழந்தையாக நடித்து பெயரும் புகழும் பெற்றார். அவர் திரையுலகில் எப்படியாவது நடன அசிஸ்ட்டண்ட்டாக, சிறிய நடனப் பையனாக அன்றைய கதாநாயகியாகவும் பின்னர் அரசியல் தலைவர்களாகவும் இருந்த முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவோடும் மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நமது மாநிலம் சார்ந்த பரமக்குடி சார்ந்த நடிகர்.
ஆனால் ரஜினி தமிழே தெரியாமல், பேசமுடியாமல் ஒரு மராட்டிய மாநிலம் விட்டு ஒரு தமிழ் நாடு மாநிலம் வந்து, படிக்கக்கூடப் பணமில்லாமல் தன் வாழ்க்கையைத் துவக்கியவர். இயக்குனர் கே.பாலச்சந்தர் மட்டும் வாய்ப்புத் தந்திருக்காவிட்டால் ரஜினி காந்த் மேலே வந்திருப்பது தமிழ்நாட்டில் கஷ்டம் தான். கமலுக்கு அப்படி இல்லை. தமிழ்நாட்டில் இயக்குனர் பாலச்சந்தர், கேரளத்தில் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன், ஆந்திரத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத் என சில ஜாம்பவான்கள் அவரைத் தூக்கி நடந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை
நடிகர் ரஜினி காந்த் நடிக்கத் தொடங்கிய போது கௌரவவேடத்தில் பதினாறு வயதினிலே படத்தில் நடித்த போது கூட தன் முத்திரையை அவர் பதிக்க முனைந்தார். கமலஹாசன் நிறையப் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்து எண்ணிக்கையைக் கூட்டினார். கமலஹாசன் முதல் 50 படங்களில் தனி ஹீரோவான தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரஜினிகாந்தின் வெளியான முதல் 50 படங்களில் பெருவாரியானவை வெற்றிப்படங்கள் தாம்.
கமல்ஹாசன் தான் பேசப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து உழைப்பார். ஆனால் ரஜினிகாந்த் அப்படி நினைத்து எதுவும் செய்வதில்லை. ஆனால் பேசப்படுபவராக மாறிப்போவார். சிவக்குமார் கூட ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'உயிரைக்கொடுத்து கமல் படம் முழுக்க நடித்தார். ஆனால் மூன்றே சீனில் வில்லனாக வந்து ரஜினி பெயர் வாங்கிக்கொண்டார். அது அவர் தலையெழுத்து' என்று சொன்னதில் எத்தனை உண்மை.
நாயகன் என்கிற படம் வந்த போது ரஜினி மனிதன் என்கிற படத்தில் நடித்தார். வெற்றியில் இரண்டும் சமமென்றாலும் நாயகன் முன்பு மனிதன் ஒரு படமே கிடையாது. ஆனாலும் வெற்றி சரிசமமாகவே இருந்தது.
கமலஹாசனை ஹிந்தியிலும் கொண்டு போய் கே.பாலச்சந்தர் நிறுத்தியது போல் ரஜினிகாந்தை முன் நிறுத்த யாரும் அன்று இருக்கவில்லை. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அமிதாப்பச்சன் நடிக்க போட்டுக்காட்டிய போது அவர் தேர்ந்தெடுத்தது (சங்கர்) கணேஷ் பாத்திரத்தை தான். அதை விரிவு படுத்துங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அமிதாப்பச்சன் சொன்ன போது அமிதாப்போடு நடிக்க நாயகர் அங்கு தயாரில்லாத போது தென்னிந்தியாவிலிருந்து ரஜினிகாந்த் கொண்டு வரப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயா டிவி ஷோவில் சொன்னது யூடியூபிலிருக்கிறது. அப்படி ரஜினிகாந்தைத் தேடி வந்ததே ஹிந்தி வாய்ப்பு. பின்னாளில் தலைவா என பாட்டு போடும் அளவுக்கு வளர்ச்சி.
சங்கரின் எந்திரன் முதலில் போனது கமலிடமே. ஆனால் அதில் ரஜினி தான் பின்னாளில் நடித்தார். கமலின் சில பாத்திரங்களில் ரஜினியும் நடிக்க முடியும் என நிரூபித்த தருணம் அது.
வீட்டில் அறிவாளியாக ஒரு பிள்ளை படித்துக்கொண்டே இருந்தாலும் நம்மை உற்சாகமாக வைக்க ஒரு அழகு பிள்ளை வேண்டும். அது தான் ரஜினி.
கமல் ரஜினியை நாம் கலைஞனாக பார்க்கலாம் போட்டியாக நினைத்தே வேலை செய்திருக்கிறார். ரஜினி கமலை தன் போட்டியாளராக நினைத்ததில்லை. அதை விட உயர்ந்த அந்தஸ்திலேயே வைத்திருக்கிறார்.
கமல் . ரஜினி இருவரும் தனித்தனியாக தன்மை உடையவர்கள் ஆனால் சினிமா முகமின்றி, ஒரு மாநிலத்திலிருந்து வேறுமாநிலத்துக்கு குடிபெயர்ந்து, அம்மாநிலமக்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களின் ரசிப்புத்தன்மையை மட்டும் கணக்கிட்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் வெற்றி பெற ஒரு தனி உழைப்பு வேண்டும். அந்த உழைப்பில் பூத்த பூ தான் தாதா சாகேப் பால்கே விருது.
ரஜினி அந்த விருதுக்கு நியாயமானவர் தான். வாழ்த்துக்கள்.
கருத்துகள்