போலி காதி பொருட்களை விற்றதற்காக மும்பை டி.என். சிங் சாலை காதி அங்காடிக்கு தடை
போலி காதி பொருட்கள் விற்பனையை அடியோடு தடுக்கும் வகையில், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காதி அல்லாத பொருட்கள் மற்றும் போலி காதி பொருட்களை விற்பனை செய்த மிகப்பழமையான காதி நிறுவனமான மும்பை காதி மற்றும் கிராமத் தொழில்கள் சங்கத்துக்கு காதி சான்றிதழை ஆணையம் ரத்து செய்துள்ளது. அந்த நிறுவனம் காதி எம்போரியம் என்ற பெயரில், 1954 முதல் டாக்டர். டி.என். சிங் சாலையில் உள்ள பழமையான மெட்ரோபாலிடன் இன்சூரன்ஸ் ஹவுஸ் என்னும் கட்டடத்தில் இயங்கி வந்தது.
அசல் காதி பொருட்கள் என்ற பெயரில் போலி காதி பொருட்களை காதி அங்காடி விற்பனை செய்து வந்ததை கேவிஐசி அதிகாரிகள் நடத்திய வழக்கமான சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பொருட்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், அவை போலி என்பது தெரியவந்தது. காதி சான்றிதழுக்கான விதிமுறைகளை மீறி, போலி பொருட்களை விற்ற அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில், காதி பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களை ஏமாற்றி வந்த அந்த நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் காதி ஆணையம் பரிசீலித்து வருகிறது.
கருத்துகள்