இன்று வைகாசி பௌர்ணமி. புத்த பூர்ணிமா
ஆபுத்திரன் கோமுகு நதியில் வீசிய அட்சய பாத்திரம் மணிமேகலைக்குக் கிடைத்த நாள் “அமுத சுரபி”அச்சயபாத்திரம் தான் ஆனால் அது பிச்சை எடுத்து நிரம்பிய பிறகு குறையாத ஒரு பிச்சைப் பாத்திரம். அந்த “அமுத சுரபி”யில் இடப்பட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் பெருகும். திரௌபதிக்குப் பின்னர் மணிமேகலை அதைப் பெற்றது தவம் வரமானது.
அந்தப் பாத்திரத்தில் பிச்சை பெற்று, அதிலிருந்து கிடைத்த உணவைக் கொடுத்துத்தான் மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தாள் மணிமேகலை. கோவலன் மாதவி மகள் மணிமேகலை துறவறம் பூண்ட நிலையில் வைகாசி பௌர்ணமி நாளில் கைக்கு வந்த அமுதசுரபி ஆபுத்திரன் என்பவனிடமிருந்து சுற்றுவழியில் வந்தது.
ஆபுத்திரன்
வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகனுக்குச் சாலினி மனைவி. இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிற வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு “இவன் பசுவின் மகனில்லை; என் மகன்” என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டு போய் வளர்க்கிறான். “பசுவின் மகன்” என்பது “ஆபுத்திரன்.”
பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் “கையும் களவுமாக”ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து …
“புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி” என்று வெருட்டுகிறார்கள்.
சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.
ஆபுத்திரன் சொல்கிறான்:
“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை”
அந்தணர்களுக்கும் ஆபுத்திரனுக்கும் இடையே மிக நல்ல வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதம்
அந்தணர்:
“பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை …
… … நீ அவ்-
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை; அறியா
நீ மகன் அல்லாய்”
ஆபுத்திரன் பல முனிவர்களின் பெயர்களை அடுக்குகிறான்.
“ஆ மகன் அசலன்; மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்றுஓங்குயர் பெரும் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ?”
“அந்த ஒவ்வொரு முனிவனின் பிறப்பிலும் ஒரு விலங்கிற்குப் பங்கு உண்டு, அப்படி இருக்கையில் பசுவிற்கு மகனாகிய எனக்கு என்ன குறை?” என்பது அவன் கேள்வி.
அப்போது ஓர் அந்தணன் ஆபுத்திரனின் தாய் சாலி பற்றிச் சொல்கிறான் — அவள் இல்லற வழியில் தவறியவள்; அப்படிப் பிறந்தவன் ஆபுத்திரன் என்று. ஆபுத்திரன் சிரிக்கிறான். பிறகு கேட்கிறான்: “திலோத்தமைக்கும் பிரமனுக்கும் பிறந்தவர்கள் வசிட்டர், அகத்தியர் என்ற இருவரும். அது பொய்யா? அப்படியிருக்க, சாலி மேல் என்ன தவறு?”
“மா மறை மாக்கள் வரு குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதலம் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு?”
இந்த உரையாடல் கேட்டு வருந்திய பூதி “ஒதும் அந்தணர்க்கு இவன் ஒத்துவராதவன்” என்று சொல்லி அவனை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறான்.
ஆபுத்திரன் பிச்சை எடுக்கிறான். “பசுவைத் திருடின கள்வன்” என்று சொல்லி ஆபுத்திரனுக்கு யாரும் நல்ல பிச்சை இடாமல் அவனுடைய பிச்சைப்பாத்திரத்தில் கல்லைப் போடுகிறார்கள்.
மனம் நொந்த ஆபுத்திரன் தென்மதுரைக்கு வருகிறான். சிந்தாதேவியின் கோயிலின்முன் இருந்த அம்பலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, ஊரில் வாங்கிய பிச்சையைப் பிறருடன் பகிர்ந்து காலம் கழிக்கிறான். ஒரு நள்ளிரவில் சிலர் அங்கே வந்து ஆபுத்திரனிடம் தங்கள் பசிக்கு உணவு கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களின் பசித்துன்பத்தைப் போக்கமுடியாமல் ஆபுத்திரன் தவிக்கிறான். நள்ளிரவில் பிச்சைக்கு எங்கே போவது? அப்போதுதான் சிந்தாதேவி தோன்றி அவனுக்குத் தன் கையிலிருந்த பாத்திரம் “அமுதசுரபி”யைக் அவனுக்குக் கொடுக்கிறாள். “நாடு முழுவதும் வறுமை அடைந்தாலும் இந்த ஓடு வறுமை அடையாது” என்று உறுதியும் சொல்கிறாள்.
“கேள் இது … கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத்
தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா! அழியல்! எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ்-ஓடு வறம் கூராது
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது”
ஆபுத்திரன் அவளை வாழ்த்தி வேண்டுகிறான்:
“சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசை-ப்-பாவாய்!
வானோர் தலவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!”
அது முதல் அந்த ஓட்டில் பிச்சை எடுத்து மக்கள், விலங்கு, பறவை என்று எல்லார்க்கும் உணவளிக்கிறான் ஆபுத்திரன். மாரிக் காலத்து நள்ளிருளில் யாம வேளையில் வழிப்போக்கர் சிலர் ஆபுத்திரனிடம் வயிறுகாய் பெரும்பசி வாட்டுகிறது என்றனர். பிச்சை வாங்கிய உணவை, முடியாதவர்களுக்குத் தந்தபின் எஞ்சிய உணவை உண்டு வந்த அவன், செய்வதறியாமல் மனம் நொந்த போது அவன் தங்கியிருந்த கோவிலின் தெய்வம் சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவன் கையில் கொடுத்த்து. அதில் உள்ள உணவு அள்ள அள்ள வளர்ந்து கொண்டே இருக்கும். அதனை அவன் தேவியைத் தொழுது வாங்கிக்கொண்டான். வழிப்போக்கர்களின் பசியைப் போக்கினான். பின்னர் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி பசியைப் போக்கிக்கொண்டிருந்தான்.
வானவர் தலைவன் இந்திரன் கொடையாளி. ஆபுத்திரன் கொடையால் இந்திரனின் பாண்டுகம்பளம் (அரியணை) ஆட்டம் கண்டது. ஆபுத்திரனை ஒடுக்க எண்ணினான். அந்தணன் உருவில் ஆபுத்திரனிடம் வந்து வரம் தருவதாகச் சொன்னான். ஆபுத்திரன் தன்னிடம் உள்ள கடிஞை போதும் என்றான். வஞ்சக இந்திரன் அந்தக் கடிஞை பயனற்றுப் போகும்படி நாடும் மக்களும் 12 ஆண்டுகள் பசியின்றி வளத்துடன் வாழத் தானே வரம் தந்துவிட்டுச் சென்றான். ஆபுத்திரனிடம் உணவு பெறுபவர் யாரும் இல்லாததால் கடிஞை செயலற்றுப் போயிற்று.
ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்றான். அப்போது வங்கக்கப்பலிலிருந்து இறங்கிய சிலர் சாவகத் தீவு மக்கள் பசியால் வாடுவதாகக் கூறினர். சாவகத் தீவுக்கு வங்கத்தின் கப்பலில் சென்றான். இடையில் புயல். இதை என்னும் பாய்மரப் பாய் கிழிந்துவிட்டது. நாய்கர் (மாலுமிகள்) மணிபல்லவத் தீவில் இறங்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர்.
ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச் சென்றுவிட்டான். மணிபல்லவத் தீவில் மக்களே இல்லை. கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான்.
இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அமுதசுரபியின் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.
ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும். (பாத்திரம் பெற்ற காதை : 48-50)
அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
பாத்திரம் பெற்றமாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் ..அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள்.
புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“புத்த பூர்ணிமாவின் மங்களகரமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் புத்தரைப் பின்பற்றுபவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாத்மா புத்தர், அகிம்சை, அன்பு, கருணை ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தார். கொந்தளிப்பு நிறைந்த உலகில், அவரது போதனைகள் முன்பை விட இன்று மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. மகாத்மா புத்தரின் போதனைகள் முழு மனித இனத்தையும் தார்மீக விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை நோக்கி உழைக்கத் தூண்டுகிறது. கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் பாதையில் செல்ல மக்களை அவர் வழிநடத்தினார்.
மகாத்மா புத்தர் காட்டிய "அஷ்டாங்கி மார்க்கத்தை" பின்பற்றி, நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்தி, அமைதியான, இணக்கமான மற்றும் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்போம் என்று உறுதி கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ‘’.புத்த பூர்ணிமாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு -
“மங்களகரமான புத்த பூர்ணிமாவையொட்டி, நமது நாட்டு மக்களுக்கும், அதற்கு அப்பால் உள்ள மக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான புத்தர் மிக ஆழமான உண்மைகளைப் போதித்தார். அவருடைய போதனைகள் நமது துக்கங்களுக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, உணர்வுள்ள உயிரினங்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
சந்தேகத்திற்கு இடமின்றி, பகவான் புத்தரும் அவரது தர்மமும் ஒளியின் நித்திய ஆதாரமாகும். அது, ஒழுக்கம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ஞானஒளி பெற்ற புத்த பகவான் காட்டிய உலகளாவிய அன்பு, இரக்கம் மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்’’.எனக் கூறியுள்ளார். புத்தபூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் புத்தமத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
வைசாகா புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே 16, 2022 அன்று அரசு முறை பயணமாக லும்பினி செல்ல உள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, லும்பினி துறவிமட மண்டலத்தில் தனித்துவம் வாய்ந்த புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டமைப்பு விழாவான “ஷிலன்யாசில்” கலந்து கொள்வார். லும்பினியில் உள்ள புனித மாயாதேவி ஆலயத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு பிரார்த்தனை செய்வார். நேபாள அரசின் ஆதரவுடன் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்த ஜெயந்தி விழாவிலும் பிரதமர் உரையாற்றுவார்
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நிதி ஆதரவோடு, லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையின் உதவியோடு சர்வதேச புத்த கூட்டமைப்பால் தனித்துவம் வாய்ந்த ‘புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையம்' கட்டமைக்கப்படும். சர்வதேச புத்த கூட்டமைப்பு என்பது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். நேபாளத்தின் முதலாவது நிகர பூஜ்ஜிய வெளியீட்டு கட்டிடமாக இந்த புத்த மையம் விளங்கும்.
மேலும் வைசாக புத்தபூர்ணிமா கொண்டாட்டமாக புதுதில்லியில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை, நேபாளத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டும் விழா அப்போது திரையிடப்படும்.
மதியம் 2 மணிக்குத் துவங்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ சிறப்பு விருந்தினராகவும், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சி அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி கௌரவ விருந்தினராகவும், கலாச்சார இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்வார்கள்.
நேபாளத்தில் நடைபெறும் புத்தபூர்ணிமா தின சிறப்பு நிகழ்ச்சிகளை மே 16, 2022 காலை 8 மணி முதல் கீழ்காணும் மின் முகவரிகளில் காணலாம்
https://www.facebook.com/ibcworld.org
https://www.youtube.com/c/IBCWorld
கருத்துகள்