காது கேளாதோருக்கான ஒலிம்பிக் அணியினரை பிரதமர் தமது இல்லத்தில் சந்தித்தார்
இந்திய காதுகேளாதோர் ஒலிம்பிக் அணியினர் அதிக பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்
“மாற்றுத்திறனாளி தடகள வீரர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினால், அவரது சாதனை விளையாட்டு உலகயும் தாண்டி எதிரொலிக்கும்”
“நாட்டிற்கு நன்மதிப்பு தேடித் தருவதில், மற்ற விளையாட்டு வீரர்களைவிட உங்களது பங்களிப்பு பன்மடங்கு அதிகம்“
“உங்களது ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள். இந்த ஆர்வம், நாட்டின் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்“
பிரதமர் திரு.நரேந்திரமோடி, அண்மையில் நடந்துமுடிந்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை, இன்று தமது இல்லத்தில் சந்தித்தார். பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியினர், 8 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர் மற்றும் திரு. நிஷித் பிரமானிக் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
அணியின் மூத்த வீரரான ரோஹித் பாக்கருடன் கலந்துரையாடிய பிரதமர், அவர் சவால்களை எதிர்கொள்ளும் விதத்தையும், எதிரியின் செயல்பாட்டை மதிப்பிடும் வழிமுறையையும் கேட்டறிந்தார். தமது குடும்பப் பின்னணி மற்றும் விளையாட்டில் தமக்கு ஏற்பட்ட உத்வேகம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்த ரோஹித், இவ்வளவு காலமாக சிறப்பான இடத்தை வகிப்பது குறித்தும் விளக்கினார். முன்னணி பேட்மின்டன் வீரரான தனிநபர் மற்றும் விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரது வாழ்க்கை, ஊக்கமளிப்பதாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். அவரது விடாமுயற்சி மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளைக் கண்டு தயங்காமல் இருப்பதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். அந்த வீரரின் தொடர் வைராக்கியம் மற்றும் வயது அதிகரித்து வரும்போதிலும் சிறப்பாக விளையாடுவதையும் திரு.மோடி சுட்டிக்காட்டினார். “விருதுகளைக் கண்டு ஓய்ந்துவிடாமலும், மனநிறைவு பெற்றுவிடாமலும் இருப்பது தான், விளையாட்டு வீரரின் சிறந்த குணம். விளையாட்டு வீரர் எப்போதும் உயரிய இலக்கை நிர்ணயித்து, அதனை அடைய முயற்சிப்பார்“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங், மல்யுத்தத்தில் தமது குடும்பப் பாரம்பரியத்தை விவரித்தார். காது கேளாதோரிடையே நிலவும் போட்டி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பது பற்றி மனநிறைவு அடைவதாகவும் அவர் தெரிவித்தார். 2005-லிருந்தே காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் தொடர்ந்து பதக்கம் வெல்லும் திறனை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர் மேலும் சிறந்து விளங்கவும் வாழ்த்து தெரிவித்தார். அவர், பழம்பெரும் வெற்றிவீரராக திகழ்வதற்கும், கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவதையும் பிரதமர் பாராட்டினார். “உங்களது மன உறுதி அனைவர்க்கும் உத்வேகம் அளிக்கும். நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், உங்களது நிலைத்தன்மை தரத்தை கற்றுக் கொள்ளலாம். உச்சத்தை எட்டுவது கடினமானது, ஆனால், எட்டிய பிறகு அந்த இடத்தை விடாமல் பிடித்திருப்பது அதைவிட கடினமானது, மேலும் முன்னேற முயற்சிப்பீர்“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.
துப்பாக்கிசுடும் வீரர் தனுஷ், தமது தொடர் பதக்க வேட்டை-க்கு குடும்பத்தினர் அளித்துவரும் ஒத்துழைப்பை எடுத்துரைத்தார். யோகா மற்றும் தியானப் பயிற்சி, தமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் விவரித்தார். தமது தாய் தமக்கு வழிகாட்டியாக திகழ்வதாகவும் அவர் கூறினார். அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக, அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். கேலோ இந்தியா திட்டம், அடிமட்ட அளவில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
துப்பாக்கிசுடும் வீராங்கனை பிரியேஷா தேஷ்முக், தமது வாழ்க்கைப் பயணம் பற்றி விவரிக்கையில், தமது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் அஞ்சலி பகவத் அளித்துவரும் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டார். பிரியேஷா தேஷ்முக்கின் வெற்றியில் அஞ்சலி பகவத்தின் பங்களிப்பை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். புனேகர் பிரியேஷாவின் தெள்ளத்தெளிவான ஹிந்தி உச்சரிப்பையும் திரு.மோடி சுட்டிக்காட்டினார்.
டென்னிஸ் வீராங்கனையான ஜெப்ரீன் ஷேக், தமது தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டார். பிரதமருடன் கலந்துரையாடுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டின் தவப்புதல்விகள் வீரத்திற்கு இணையான திறமை பெற்றிருப்பதோடு மட்டுமின்றி, அவர் மற்ற இளம் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “இந்தியாவின் புதல்வி, எந்த ஒரு இலக்கை நோக்கிக் குறிவைத்துவிட்டால், அந்தத் தடை வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து இலக்கை அடைவார் என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வீரர்களின் சாதனைகள் தலைசிறந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களது ஆர்வம், எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்பதன் அறிகுறி என்றும் தெரிவித்தார். “இந்த ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள். இந்த ஆர்வம், நமம் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, றிப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது“ என்றும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஒருவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினால், அவரது சாதனை விளையாட்டு உலகையும் தாண்டி எதிரொலிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதோடு, உணர்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் அவர்களது உணர்ச்சிகள் மற்றும் அவர்களது திறமைக்கு மரியாதை உள்ளது. எனவேதான், “ஆக்கப்பூர்வ எண்ணத்தை உருவாக்குவதில் உங்களது பங்களிப்பு, மற்ற விளையாட்டு வீரர்களைவிட பன்மடங்கு அதிகம்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு பெருமையும் புகழும் தேடித்தந்த சேம்பியன்களுடனான கலந்துரையாடலை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த வீரர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, அவர்களது ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டையும் எண்ணால் உணர முடிந்தது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். “நமது சேம்பியன்களால், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் இம்முறை, இந்தியாவுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது“ என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்