மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் பிரதமருடன் சந்திப்பு
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர், நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“ மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சியின் அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி வந்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
உடன் பாரதிய ஜனதா கட்சியின் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உடனிருந்தார். ஜே.பி.நட்டாவுடன் ஷிண்டே 40 நிமிடங்கள் பேசியதில், மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் பற்றி விவாதித்தாகத் தெரிய வருகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தற்போது புனே திரும்பியுள்ளார். முன்னதாக, டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அடுத்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. எங்கள் அரசுக்கு 164 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர பிற கட்சிகளை உடைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், பாரதிய ஜனதா கட்சிக்கு 115 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னிடம் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் என்னைத்தான் முதல்வராக்கி உள்ளனர்,’’ என்றார் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பும், பின்பும் என 2 கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள 12 பேருக்கும், பாரதிய ஜனதா கட்சியில் உள்ள 29 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
கருத்துகள்