மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கும் திட்டம் தெற்கு நாக்பூரில் அமைச்சர் கலந்து கொண்டார்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதே எங்கள் அரசின் நோக்கம் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்
சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைந்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதும், சேவை புரிவதுமே எங்கள் அரசின் நோக்கம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி கூறினார்.
மத்திய அரசின் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தெற்கு நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர்.வீரேந்திர குமார், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய நிதின் கட்கரி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
2016-ம் ஆண்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை இயற்றியது. இதன் அடிப்படையில், 2022 பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 23 வரை, தேசிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில். நாக்பூர் நகரில் 28,000 பேர் மற்றும் நாக்பூரில் 8,000 பேர் உட்பட சுமார் 36,000 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ரூ.34.83 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 41 ஆயிரம் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
நாக்பூர் நகரின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த உபகரணங்களை விநியோகிப்பதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இன்று தெற்கு நாக்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில், 9,018 பயனாளிகளுக்கு மொத்தம் 66 ஆயிரம் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த விலை ரூ.9 கோடிக்கும் அதிகமாகும்.
இந்த உபகரணங்களுள், கைகளால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கீரினிங் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட 43 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள்