பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிப்பு துறையை மாநில அரசுகள் ஊக்குவிக்க மத்திய இணையமைச்சர் வேண்டுகோள்
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நடந்த நிகழ்வில் மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. அஷ்வினி குமார் செளபே, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் செயலர் திரு. நரேஷ் பால் கங்வார், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமை செயலர் திருமதி. சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திருமதி ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு. அஷ்வினி குமார் செளபே கூறுகையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும், பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்துவதில் சர்வதேச தளத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கடலில் கலக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்த மத்திய அமைச்சர், இதை தவிர்க்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்தார். மேலும், பிளாஸ்டிக்கை தடை செய்வதன் மூலம் புதிய தொழில்களும் உருவாகுவதோடு, பிளாஸ்டிக்கிற்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியா இயக்கத்தை ஊக்குவிக்கின்றன என்று பேசினார். இத்தகைய நிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாநில அரசுகள் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் தமிழக அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் பேசுகையில், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது எளிதானது என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் மனித வாழ்கைக்கும், இதர உயிர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் மாறிவிட்டது என்றார். இயற்கையை பாதுகாக்க, பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருட்களை கண்டுபிடித்து, அதை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
கருத்துகள்