தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறையினர்
இன்று மூன்றாவது நாளாக சோதனை நடத்தினர். வருமானத்திற்கு மேல் அதிகமாக ரூபாய்.2000 கோடி சொத்துக்களை குவித்ததெப்படி என்று பாண்டித்துரையிடம் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டிதுரை, (வயது 47). நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரமுள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்துள்ளார்.படிப்படியாக ஊழல் மூலம் வளர்ந்தவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி.கே.பழனிச்சாமி முதல்வராக இருந்த போது பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததால் அவரது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறிய பின்னர்.நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராகப் பதிவு செய்து கொண்ட பாண்டித்துரை,
தொடர்ந்து கோடிக்கணக்கில் அரசு பணிகளை ஒப்பந்தமெடுத்து பணி செய்யத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாண்டித்துரை அடுத்தடுத்து அவருக்கு பல கோடி ரூபாய் அளவில் அரசு ஒப்பந்தங்கள் கிடைத்ததனால் இவரது சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி அளவில் உயர்ந்தது. கடந்த அதிமுக ஆட்சி க்காலத்தில் முறைகேடாக ரூபாய். 5 ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று, பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றது. முறைகேடாக விடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பாண்டித்துரை ரூபாய்.500 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்ததாகத் தெரிகிறது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பாண்டித்துரையின் வீட்டில் 12 ஆம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் பாண்டித்துரை குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ்'' என்ற பெயரில் இயங்கும் அவரது அலுவலகம், அதே பகுதியிலுள்ள அவரது வீடு, அவரது மேலாளர் பீட்டரின் வீடு உள்ளிட்ட இடங்களில் 30 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதில் முதல் நாளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வீட்டிலுள்ள அறையில் பூட்டி வைத்தனர். சோதனையை முடித்துக் கொண்டு புதுக்கோட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கினர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை மீண்டும் பாண்டித்துரை வீட்டிற்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து முறைகேடு குறித்து விசாரித்து பதிவு செய்தனர். பாண்டித்துரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோடிக்கான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இந்த ரூபாய். 2,000 கோடி சொத்துப் பத்திரங்கள் புதுக்கோட்டை வீட்டிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து இவ்வளவு சொத்து வாங்கியது எப்படி, இதற்கு பணம் கொடுத்தது யார் என்று ஒரு தனிக் குழு அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் பாண்டித்துரையை நேரில் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டித்துரையின் வளர்ச்சி என்பது கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டித்துரை செய்த முறைகேடுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாண்டித்துரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அடுத்தகட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடுக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விசாரிக்கப்பட்டால் அதிமுகவின் பெரும்புள்ளி வரை விசாரணை நீள்வதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்