ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை இரத்து செய்த உயர்நீதிமன்றம்
பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்துமென அச்சம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க தமிழ்நாடு ஹரிஜன் நலத் திட்டத்துக்காக நிலம் கையகபடுத்தும் சட்டத்தின் கீழ் 2.59 ஹெக்டேர் நிலத்தை கையகபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து நில உரிமையாளர்களான ரங்கராஜன், அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவில் தலையிட முடியாதென்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ்பாபு உள்ளிட்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "குறிப்பிட்ட இந்த நிலம் சதுப்பு நிலமாகும். இங்கு எந்தவிதமான கட்டிடமும் கட்ட முடியாது. நிலம் கையகப்படுத்தும் முன் தங்கள் தரப்பு கருத்துகளையும் மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை" என வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு சதுப்பு நிலம் தான் வேண்டும் என பயனாளிகள் விரும்புவதாகவும், அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "தாசில்தாரின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்கவில்லை. அதேபோல, நில உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கவும் அவகாசம் அளிக்கவில்லை. எனவே, நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது " என உத்தரவிட்டனர். மேலும், பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் நீதிபதிகள் அச்சம் தெரிவித்தனர்.
கருத்துகள்