இ- நீதிமன்ற திட்டங்களின் முன்னெடுப்புக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர்
இ- நீதிமன்ற திட்டங்களின் முன்னெடுப்புக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ
இ-நீதிமன்ற திட்டங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா புதுதில்லியில் உள்ள ஜெய்சால்மர் இல்லத்தில் நீதித் துறை சார்பில் நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல், சட்டத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், குடிமக்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட்ட முனைப்பான நடவடிக்கைகளை உள்ளடக்கிய திஷா (DISHA) எனப்படும் முழுமையான நீதியைப் பெறுவதற்கான புதிய வகையிலான தீர்வுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்ற மேஜை மீது வைக்கக்கூடிய நாள்காட்டியையும், மத்திய அமைச்சர் வெளியிட்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு கிரண் ரிஜிஜூ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பது விரைந்து வழங்கப்படவேண்டியது கட்டாயம் என்றார். நாடு முழுவதும் இன்றைக்கு 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த எண்ணிக்கையை குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பங்கு இன்றியமையாதது என்றும் கூறினார். அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணை சுமையைக் குறைக்க ஏதுவாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி ஒய் சந்திரசூட்-டின் வழிகாட்டுதலின்படி, இ- கமிட்டியின் ஒத்துழைப்புடன் நீதித்துறை பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல், குடிமக்களை மையப்படுத்திய பல்வேறு சேவைகளை நீதித்துறை வழங்கி வருவதற்கு பாராட்டுத் தெரிவித்தார். நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவருக்கும் நீதி என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி, அனைவருக்கும் நீதி வழங்க நீதித்துறை போராடி வருவதையும் சுட்டிக்காட்டினார். இ- கமிட்டியின் ஒத்துழைப்புடன் இ- நீதிமன்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தின் கண்ணோட்டத்தின் படி, இந்திய நீதித்துறை, வெளிப்படையான அணுகுமுறைகளைக் கையாண்டு சாதனைகளை படைத்திருப்பதாகவும் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல் கூறினார்.
கருத்துகள்