ஆயுஷ் ஆதாரங்களின் அடிப்படையிலான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் பாரம்பரிய மருத்துவ முறையை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்
உலகிலேயே பாரம்பரிய மருத்துவத் முறையில் இந்தியா முன்னணியில் உள்ளது என ஆயுஷ் துறையின் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார். இன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற யுனானி தினம் 2023 மற்றும் அது தொடர்பான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ் இந்தியா உலக சுகாதார அமைப்பு சார்பில் உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை ஏற்படுத்தும் முயற்சியை இந்தியா எடுத்துள்ளது என்றார். உலகில் பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா தலைமை வகிக்கிறது என்பதை இது குறிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆராய்ச்சி திறன்களையும், கல்வி வசதிகளையும் வலுப்படுத்தி சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் பணியாற்ற வேண்டும் எனவும் இதில் இந்தியா உறுதியுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ் அமைச்சகத்துக்கான நிதி கணிசமாக உயர்த்தப்பட்டு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். யுனானி மருத்துவ முறைக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளதாகவும், 2014-ம் ஆண்டிலிருந்து அது வளர்ந்து வருவதாகவும் திரு. சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் டாக்டர் முன்ஜபாரா மகேந்திரபாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்