நீட் மசோதா குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்காதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
நீட் மசோதா குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு
கிடைக்கவில்லை என்பது காணாமல் போவது கடிதமல்ல நிர்வாகத்தின் நேர்மை என மார்க்ஸீய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து நான் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு 19.ஜனவரி.2023 ஆம் தேதியன்று கடிதம் எழுதி இருந்ததில் 15 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படாமல் தாமதமாவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர்களும் மாணவர்களும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். (கடித எண் H97/GOI/MP/Madurai/19.01.2023).
இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து பதில் வந்ததில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ( கடித எண் CII - 11001/1/2022- CA -II dated 02.03.2023).
பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள் துறை அமைச்சகத்திடமிருந்து தற்போது பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்டப் பதில் (RTI Reply) அதிர்ச்சியளிக்கிறது.
"24.12.2022. ஆம் தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த கடிதம் தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை." ( பார் வை: A/43020/01/2023- RTI - 897 dated 17.05.2023). என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக
உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாகச் சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.
தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில் மத்திய அரசு சார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப் போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளேன்.
கருத்துகள்