கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு..!
கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தலன்று கோமதி எனும் பெண் கொலை செய்யப்பட்டார். தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரவியது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டக் காவல்துறையினர் அது குறித்து தீர விசாரித்து நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.
விசாரணையில், கோமதி குடும்பத்தினருக்கும், கலைமணி குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதில் கலைமணி மீது ஏற்கனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்து வந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் செய்ய கோரி பலமுறை வற்புறுத்தியும், கோமதி குடும்பத்தினர் அதனை வாபஸ் வாங்காத காரணத்தினால் அன்று மீண்டும் ஏற்பட்ட தகறாரிலேயே கோமதி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். தேர்தலுக்கும், இந்தக் கொலைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, இதுகுறித்து தவறான காணொளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்த நிலையில், பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான காணொளியை தொடர்ந்து பரப்பியதாக வட இந்தியர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் சின்ஹா என்பவர் ரோஷன் என்ற பெயரில் தவறான கருத்தை பரப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரபாகர் மற்றும் சண்முகம் உள்ளிட்ட மூவர் மீது சைபர் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். தவறான தகவல் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும், கைது செய்யப்படுவார்கள் என சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தத் தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC) அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்