இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகத்தின்
சார்பில் "பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பு" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் சார்பில், "பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள ( ready to use ) இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பு" என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று (25-04-2024) நடைபெற்றது.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் ஜி. பவானி, இந்நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கிக் கூறினார். ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான தகவல்களைப் பகிரவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பாரம்பரிய இட்லி தயாரிப்பு, தோசை மாவு தயாரிப்பு மற்றும் வடை மாவு தயாரிப்பது மற்றும் அவற்றுக்கான தரநிலைகளை எடுத்துரைத்தார்.
பிஐஎஸ்-ஸின் உணவு மற்றும் வேளாண்துறை விஞ்ஞானி லவிகா சிங் பேசுகையில், இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவின் கலவை, செயல் முறைகள், பேக்கேஜிங் தேவைகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். இந்த தரநிலைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உற்பத்தியாளர்கள் நிலையான தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து, அதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் திருப்தியை மேம்படுத்த முடியும். என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் செல்வி பி எஸ் விஜயலட்சுமி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்த தரநிலைகள் நுகர்வோரின் ஆரோக்கியம், திருப்தி மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். தரத்தின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மூலம் இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது பாராட்டுக்குறியது என்று அவர் கூறினார்.
முன்னதாக, விஞ்ஞானி திரு தினேஷ் ராஜகோபாலன், பிஐஎஸ்-ஸின் செயல்பாடுகள் மற்றும புதிய முயற்சிகள் பற்றி விளக்கினார்.
நிகழ்ச்சியில் மாவு தொழில்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்