தேசிய பாதுகாப்பு அகாடமியின் கமாண்டன்ட்டாக வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் பொறுப்பேற்றார்
வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் இன்று (25 மே 2024) தேசிய பாதுகாப்பு அகாடமியின் கொடி அதிகாரியாக (கமாண்டண்ட்) பொறுப்பேற்றார். ஏற்கெனவே இந்த பதவியில் இருந்த வைஸ் அட்மிரல் அஜய் கோச்சாரிடமிருந்து அவர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், 1990 ஜூலை 1 அன்று இந்திய கடற்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
இவர் கடற்படையில் பல்வேறு பயிற்சிகளை நடத்தியுள்ளார். பீரங்கி மற்றும் ஏவுகணைப் பிரிவில் நிபுணரான இவர், இந்திய கடற்படை கப்பல்களான ரஞ்சித் மற்றும் பிரஹார் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஐ.என்.எஸ் பிரம்மபுத்ராவில் பீரங்கிப் பிரிவு அதிகாரி, ஐ.என்.எஸ் ஷிவாலிக்கில் நிர்வாக அதிகாரி, மற்றும் ஐ.என்.எஸ் கொச்சியில் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். ஐஎன்எஸ் வித்யுத் மற்றும் ஐஎன்எஸ் குக்ரி ஆகிய போர்க்கப்பல்களிலும் அவர் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் ஐ.என்.எஸ் துரோணாச்சார்யா பள்ளியில் பயிற்றுவிப்பாளராகவும், கோவாவின் கடற்படை போர் கல்லூரியின் துணை கமாண்டண்டாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
29 நவம்பர் 2022 அன்று, அவர் கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரியாக பொறுப்பேற்றார். 15 ஜனவரி 2024 அன்று வைஸ் அட்மிரல் நிலைக்கு அவர் உயர்ந்தார்.
அவரது சிறந்த சேவைக்காக நவ சேனா பதக்கம் (2020), அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (2024) உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.சி., எம்.பில்., (பாதுகாப்பு மற்றும் உத்திசார் பயிற்சிப் பிரிவு) பட்டம் பெற்றுள்ள அவர், பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு இந்திய மற்றும் சர்வதேசப் பயிற்சித் திட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
பரந்த அனுபவம் கொண்ட வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் தலைமையில், பயிற்சி, மனிதவள மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், தேசிய பாதுகாப்பு அகாடமியின் செயல்பாடுகள் மேலும் மேம்படும்.
கருத்துகள்