இந்தியத் தர நிர்ணய அமைவனம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இந்தியத் தர நிர்ணய சான்றிதழ் குறித்த பயிற்சி நிகழ்வை இன்று சென்னையில் நடத்தியது
இந்தியத் தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இந்தியத் தர நிர்ணய சான்றிதழ் தொடர்பான பயிற்சி நிகழ்வை இன்று (24.5.2024) சென்னை எழும்பூரில் நடத்தியது.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு இணைத் தலைமை இயக்குநரும், தென் மண்டலத் தலைவருமான திரு கே. உன்னிகிருஷ்ணன், பிரமுகர்களையும் பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார். இதில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை வலியுறுத்திய அவர், நாட்டிற்குள் தரமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க விதிமுறைகளை வகுத்திருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர் / இயக்குநர் திருமதி ஜி.பவானி இந்த நிகழ்வின் நோக்கங்களை எடுத்துரைத்தார். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சந்தையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலம் கட்டாய தர நிர்ணய சான்றிதழை அமல்படுத்துவது, வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் தரமற்ற தயாரிப்புகள் நாட்டிற்குள் வருவதைக் கணிசமாகக் குறைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைவனத்தின் இணை இயக்குநர் திரு பி.ஜே.கௌதம், பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், தர நிர்ணய உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை, தயாரிப்புக் கையேடுகள் ஆகியவற்றுக்கான விளக்கக்காட்சியை வழங்கினார்.
முன்னதாக, அமைவனத்தின் துணை இயக்குநர் திரு தினேஷ் ராஜகோபாலன், பிஐஎஸ் செயல்பாடுகள், இ-பிஐஎஸ், பிஐஎஸ் கேர் செயலி உள்ளிட்ட சமீபத்திய முயற்சிகள் குறித்து விளக்கினார்.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் இணை இயக்குநர் திருமதி செல்வநாயகி இந்தியத் தர நிர்ணய அமைவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 55 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள்