மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சட்ட நடைமுறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால்
காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் நோக்கில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, இன்று (2024 ஜூன் 23) சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி, குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து நான்காவது நகரமாக சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடக்க அமர்வில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா தலைமை நீதிபதி திரு அலோக் ஆரதே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (தற்காலிகப் பொறுப்பு) திரு ஆர்.மகாதேவன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நோக்கங்களை எடுத்துரைத்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைச் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்துக் கூறினார். பழங்கால காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அதாவது இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1983 ஆகியவற்றை ரத்து செய்து, 2023 டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (இந்திய நியாயச் சட்டம்) மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டதாக அவர் கூறினார். சட்டத்துறையில் காலனித்துவ தடயங்களை அகற்றுவதற்கும், இந்திய மதிப்புகள் மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்பவும் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்திய சட்டத்துறை வரலாற்றில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால், நமது சட்ட அமைப்பு காலனிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக கூறினார். தற்போது நாட்டின் சரியான சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். பிரிட்டிஷாரின் குற்றவியல் நீதி பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அவர் விவரித்தார். காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதார்த்தங்களை புறக்கணித்தன என்று அவர் கூறினார். அந்தச் சட்டங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். காலனித்துவ பாரம்பரியத்தின் அனைத்து தடயங்களும் அகற்றப்பட்டு, நவீன குற்றவியல் நீதி அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்த மூன்று சட்டங்களும் நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.
தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது உரையில், இந்த மூன்று புதிய சட்டங்களும் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாராட்டினார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது என்றும், காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது என்றும் அவர் கூறினார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி திரு ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், இந்த புதிய சட்டங்களும் குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் முழு சட்ட அமைப்பிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
தெலங்கானா தலைமை நீதிபதி திரு அலோக் ஆரதே, நவீன கால குற்றங்கள் மற்றும் சமூகத்தின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சட்டங்கள் பங்களிக்கும் என்று கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (தற்காலிகப் பொறுப்பு) திரு ஆர்.மகாதேவன் பேசுகையில், மூன்று புதிய சட்டங்களும் முற்போக்கானவை என்று கூறினார். இந்தச் சட்டங்களில் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல புதிய நடைமுறைகள் உள்ளன என்று அவர் கூறினார்.
மாநாட்டின் தொடக்க அமர்வைத் தொடர்ந்து மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில், நவீன காலத்தில் புதிய குற்றங்களில் சட்டத்தின் தாக்கம், நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடைமுறை மாற்றங்கள் மற்றும் சட்டச் செயல்பாட்டில் ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதன் முக்கிய பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கருத்துகள்