இலஞ்சம் வாங்கியதாகப் பிடிபட்ட துணை வருவாய் வட்டாட்சியர் மருத்துவமனை சிகிச்சையிலிருந்து தப்பியோட்டம்
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் துரைராஜ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறமுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இந்தத் திருமண மண்டபத்திற்கு தடையின்மைச் சான்றிதழ் NOC பெற பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்கு துரைராஜிடம் துணை வருவாய் வட்டாட்சியர் பழனியப்பன் (வயது 42) ரூபாய் .20 ஆயிரம் இலஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இலஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் அது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளித்தார்.
அதையடுத்து புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை அரசு சாட்சிகள் முன்பு பின்லாந்தின் ரசாயனப் பொடி தடவிய நிலையில் ரூபாய் .20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்கும் படி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுறுத்தியதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்குஅரசு காட்சியுடன் சென்ற போது அங்கு பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் குழுவினர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் மறைந்திருந்தனர்.
அங்கு துரைராஜ் இலஞ்சப் பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்ற போது பழனியப்பன், அலுவலகத்திலிருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (வயது 42) லஞ்சப் பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடமிருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்கும்படி கூறிய இடத்துக்குக் கொண்டு சென்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை வருவாய் வட்டாட்சியர் கூறியதன் அடிப்படையில் தான் லஞ்சப் பணம் பெற்றதாகக் கூறிய நிலையில் துணை வருவாய் வட்டாட்சியர் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.
அதையடுத்து நல்லுச்சாமியை இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாகக் கூறிய துணை வருவாய் வட்டாட்சியர் பழனியப்பனை சிகிச்சைக்காக தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மருத்துவமனையில் டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக பொய் கூறி வருகிறார் என தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி இன்று காலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனைத் தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள். பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்கச் செல்வதாக வார்டிலிருந்து சென்றவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை அறிந்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அது தொடர்பாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் அவரது உயர் அலுவலர் தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.
தப்பியோடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் அவரது சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை வருவாய் வட்டாட்சியர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது
கருத்துகள்