கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மலைச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி,
வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பின் அங்கிருந்து இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு நோக்கிப் புறப்பட்டார்.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களை அவர் வான் வழியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மலைச்சரிவை அடுத்து பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கப்பட்டது. மேலும், பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் டேப் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார், மேலும் தரை வழியாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்தே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலைச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாகவே ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு அலுவலர்கள் விளக்கினர். பிரதமருடன் கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்,
பின்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டள்ள முகாம்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதலும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறைகளை கண்கலங்கியவாறு கூறியதைக் கேட்ட பிரதமர் அவர்களின் தோலில் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.
அடுத்து பிரதமர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் உதவிகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பாதுகாப்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரளா அரசு ரூமாய்.2,000 கோடி நிதியுதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்