கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பேரணியாகச் சென்றவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக்காகப் பிரச்சாரம் செய்கிறேன் என்றார். நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், கேரளா சென்ற பிரியங்கா காந்தி நேற்று வயநாடு மாவட்டமா கல்பெட்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திறந்த வாகனத்தில் பேரணியாகச் சென்றார்.
அப்போது அவரது சகோதரர் ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பனக்காட் சய்யித் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உடன் இருந்தனர். இந்தப் பேரணியில், வயநாடு மட்டுமல்லாது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த பிரியங்கா, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான டி.ஆர்.மேகா ஸ்ரீ யிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி உடனிருந்தனர். முன்னதாக வாகனப் பேரணியின் போது பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது: எனது சகோதரர் வெற்றி பெற்ற இந்த வயநாடு தொகுதியில் நான் போட்டியிடுவதை கௌரவமாகக் கருதுகிறேன். 1989-ஆம் ஆண்டு எனது தந்தை ராஜீவ் காந்திக்காக வந்து வாக்குகள் சேகரித்தேன். அப்போது எனக்கு வயது 17. அதன் பிறகு என்து தாய், சகோதரர் மற்றும் கட்சிப் பிரமுகர்களுக்காக பல முறை தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.இந்த முறை 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எனக்காகப் பிரச்சாரம் செய்கிறேன்.
உங்கள் ஆதரவை எனக்காக கோருகிறேன். இது எனக்கு மிகவும் வித்தியாசமான உணர்வைத் தருகிறது. சகோதரர் பணியைத் தொடர்வேன். இந்த உலகமே எனது சகோதரருக்கு எதிராக இருந்த போது அவருக்கு நீங்கள் ஆதரவளித்தீர்கள். துணிச்சலுடன் போராட நீங்கள் அவருக்கு வலிமையைக் கொடுத்தீர்கள். இந்த தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எனது சகோதரர் என்னிடம் விளக்கினார். அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர விரும்பும் எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். எனத் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 7,06,367 வாக்குகள் பெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் மொத்தம் 64.94 சதவீதம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனீரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார்.
அதனையடுத்து 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி இம்முறை போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வென்றார். வயநாடு லோக்சபா தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69 சதவீதம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார். ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதே நாளில் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். இதனிடையே வயநாடு லோக்சபா தொகுதியில் வரலாறு காணாத நிலச்சரிவால் பெருந்துயரம் சமீபத்தில் நிகழ்ந்தது. இதனால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இயல்பு நிலைமை திரும்பியுள்ளதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் மாதம் 13- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வயநாடு லோக்சபா தொகுதியில் 18- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அக்டோபர் மாதம் 25- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 30-ஆம் தேதி கடைசி நாள் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும்.. இந்த நிலையில் ஜார்கண்ட், மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் சட்டசபைதா தேர்தலுடன் சேர்ந்து நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் பிரியங்கா காந்தியை விட அவரது கணவருக்கு பல மடங்கு சொத்துக்கள் இருப்பது தெரிந்துள்ளது. பிரியங்கா காந்தியின் கையில் பணமாக 52,000 ரூபாய் உள்ளதாகவும், 4.24 கோடி ரூபாய்க்கான முதலீடு உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 3.67 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா பரிசாக வழங்கிய 2004 ஆம் ஆண்டு மாடல் ஹோண்டா சி.ஆர்.பி கார் தனது பெயரில் உள்ளதாகவும், அதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 29.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் பிரியங்கா காந்தி பெயரில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் கையில் 2,18,084 ரூபாய் உள்ளதாகவும், 37.91 கோடி ரூபாய்க்கான முதலீடு உள்ளதாகவும், 65.55 கோடி ரூபாய்க்கான அசையாச் சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 37.61 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூசர் கார், மினி கூப்பர், 4.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுசுகி பைக் ஆகியவையும் ராபர்ட் வதேராவிடம் உள்ளதாகவும் பிரமாணபத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. , பிரியங்காவுக்கும், அவரது சகோதரர் ராகுல் காந்திக்கும் சம உரிமை உள்ள 2.10 கோடி ரூபாயிலான சொத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா 15.75 லட்சம் ரூபாய் வங்கிக் கடனும், ராபர்ட் வதேராவுக்கு 10 கோடி ரூபாய்க்கான வங்கிக்கடனும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு 11.98 கோடி ரூபாய்க்கான அசையாச் சொத்துகள் உள்பட மொத்தம் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், ராபர்ட் வதேராவிடம் 65.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும் தெரியவருகிற நிலையில் பிரியங்கா காந்தி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுத்தாக்கல் பிரமாணபத்திரம் மூலம் ஹத்ராஸில் போராட்டம் நடத்தியது சம்பந்தமான வழக்கு, எக்ஸ் வலைத்தளத்தில் தவறான தகவல் ட்வீட் செய்ததாக ஒரு வழக்கு, பாம்புபிடிக்காரர்களை சந்தித்தது என மூன்று வழக்குகள் அவர் மீது உள்ளன. 52 வயதான பிரியங்கா காந்தி டெல்லி யுனிவர்சிட்டியில் சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்துள்ளார். இங்கிலாந்தின் யுனிவர்சிட்டி ஆஃப் ஸண்டர்லாண்ட்-ல் (sunderland) பெளத்தம் சம்பந்தமான பி.ஜி டிப்ளமோவும் படித்துள்ளார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத பிரியங்கா காந்தி முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிறைந்துள்ளது.
கருத்துகள்