நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்தது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தினார். இதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் 2024 நவம்பர் 24 காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெற்றதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 இன்று துவங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று நிறைவடைகிறது. "அரசியலமைப்பு தினத்தை" யொட்டி, 2024 நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமை வகித்தார்.
அவை துவங்கியது முதல் மணிப்பூர் வன்முறை, மற்றும் ஊழல் லஞ்ச வழக்கில் கௌதம் அதானிக்கு அமெரிக்க ஐக்கிய நாடு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஜெகதீப் தங்கர் இன்று நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
இதன்பின் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலுள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்த மசோதாவை தவிர பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா, வணிகக் கப்பல் மசோதா, கடலோரக் கப்பல்கள் மசோதா, இந்தியத் துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்த தொடருக்காக மத்திய அரசு பட்டியலிடவில்லை. எனினும் அந்த மசோதாவை வருகிற தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்