ஆயுள் தண்டனைக் கைதி சித்ரவதை செய்த குற்றச்சாட்டில் சிக்கிய சிறைத்துறை DIG, கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சிறைத்துறை அலுவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதி சிவக்குமார் (வயது 30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ளார்,
சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் சரக சிறைத்துறை DIG ராஜலட்சுமிக்கு வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலூர் மத்திய சிறையிலிருந்த சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அதில் அவர், வீட்டிலிருந்த ரூபாய்.4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடியதாகக் கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி செல்லில் அடைத்து சிவக்குமாரை சித்ரவதை செய்ததாக புகார் தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் CBCID விசாரணைக்கு உத்தரவிட்டதன்பேரில் CBCID காவல் துறை வேலூர் சரக சிறைத்துறை DIG ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆயுள்தண்டனைக் கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
வேலூர் சரக DIG ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், சிறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல்-2 சிறைச்சாலைக்கும் மாற்றம் செய்யப்பட்டார்.
மீண்டும் இந்த வழக்கு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் இந்த வழக்கில் உயர் அலுவலர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நிலையில் DIG ராஜலட்சுமி, ADSP அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயர் அலுவலர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தெவித்தனர். ஆயுள் தண்டனைக் கைதி சிவக்குமாரை 95 நாட்கள் தனிமைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் மத்திய சிறையில் CBCID SP-வினோத் சாந்தாராம் விசாரணை நடத்தினார். கைதி சிவகுமாரை தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் கலாவதி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் HCP வழக்குத் தொடரப்பட்டதை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, புகார் தொடர்பாக வேலூர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் நீதிபதி ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வேலூர் சிறைத் துறை காவல்நிலையத்தில் BNS சட்டத்தின் 115(2), 118(2), 146, 49, 127(8) ஆகிய 5 பிரிவுகளின் படி வேலூர் சரக சிறைத்துறை DIG- ராஜலட்சுமி, மத்திய சிறையின் (பொறுப்பு) கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன், DIG-யின் மெய்க்காவலர் ராஜூ, சிறப்புப் படைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ததில், தண்டனைக் கைதி சிவக்குமார் உள்ளிட்ட சிலர் சிறைச்சாலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் பணி, காற்று நிரப்பும் பணி, தோட்ட செடிகள் பராமரிப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 1983-ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்ட விதிகள் 447-ன் படி சிறைவாசிகள் சிறைக்கு வெளியே பணியமர்த்த சிறைத்துறை தலைவரின் முன் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், கைதியான சிவக்குமார் உள்ளிட்டோரை வெளியில் பணியில் அமர்த்தியதற்கான அனுமதி எதுவும் பெறவில்லை. மேலும், சிறைச்சாலை விதிகளை மீறி DIG வீட்டில் கைதி சிவக்குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.சிறைத்துறை DIG வீட்டிலிருந்து ரூபாய்.4.25 லட்சம் பணம் திருடு போனதாக கூறப்பட்டுள்ளது குறித்து. அது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.
தண்டனைக் கைதி சிவக்குமார், எச்.எஸ்-4 தொகுதியில் 81 நாட்கள் தனிமைச்சிறையிலும் மூடிய தனிச்சிறையில் 14 நாட்களும் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்பாக வேலூர் CBCID காவல்துறை ஆய்வாளர் இந்திரா வழக்குப்பதிவு செய்துள்ளதன் தொடர்ச்சியாக விசாரணை அலுவலராக சென்னை CBCID-1 SP-யான வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். அவர், சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் செப்டம்பர் மாதம்.10 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சிவக்குமார் தெரிவித்த தகவல்களை காணொளி காட்சியில் CBCID அலுவலர்கள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் CBCID SP-யான வினோத் சாந்தாராம் செப்டம்பர் மாதம்.11 ஆம் தேதி காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சிவக்குமாரை அடைத்து வைத்திருந்த தனி அறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்