புதுடெல்லியில் பாரத் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
இன்று (மே 24) நடைபெற்றதில் பங்கேற்று தமிழஞ முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
எங்களது அரசில் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, செயலாற்றி வருகிறோம். அதன் பயன்கள் தான் புள்ளிவிவரங்களாக, வளர்ச்சிக் குறியீடுகளாக எதிரொலிக்கின்றன.
குறிப்பாக, அண்மைக்காலங்களில் ஆண்டுதோறும் 8 விழுக்காட்டுக்கும் மேலான வளர்ச்சி. கடந்தாண்டு நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சி என்ற பாய்ச்சலில், இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047- ஆம் ஆண்டில்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை எங்கள் முன் வைத்துக்கொண்டு உழைத்து வருகிறோம். இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் தொழில்மயமாகியுள்ளது. ஆட்டோமொபைல் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, அனைத்து வளர்ந்து வரும் துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காட்டு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். நகரமயமாக்கலில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது!
அதிகரித்து வரும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், நல்ல உட்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்குவது நம்முடைய கடமை. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். ‘அம்ருத் 2.O’ திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்