மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர்
பத்மஸ்ரீ டாக்டர் நம்பெருமாள் சாமி இயற்கை எய்தினார். பூர்ண ஆடி அமாவாசை தினத்தில் அவருக்கு மோட்சம் கிடைக்கப். பிரார்த்திப்போம்.
இந்தியாவில் முதலில் குறை பார்வைக் கண் மருத்துவ சிகிச்சை உதவி மையம் தொடங்கி அதன் மூலமாக பல லட்சக்கணக்கான மக்களின் கண் பார்வை தொடர்பான பல நோய்களை குணப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்த ஒரு மகா தீபம் இன்று காலை நிரந்தரமாக அணைந்தது.
அது தான் பத்மஶ்ரீ டாக்டர் நம்பெருமாள்சாமி.
தேனி மாவட்டம் -அம்பாசமுத்திரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பெருமாள்சாமி நாயக்கர்-பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த டாக்டர் நம்பெருமாள்சாமி.
மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்த பின்,அமெரிக்காவில் இலினொய் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து .1967 ஆம் ஆண்டில் மதுரை இராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் கண் மருத்துவராகத் பணியைத் துவங்கினார்.
குறை பார்வை கண் மருத்துவ சிகிச்சை உதவி மையத்தை,இந்தியாவிலேயே முதலில் மதுரை இராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் துங்கினார்.
அப்போதுதான் அதே மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் கண் மருத்துவத் துறைத் தலைவராக இருந்த மருத்துவர் வெங்கிடசாமி என்பவருடன் தொடர்பு வந்தது.
அக் காலத்தில் மருத்துவர்களை தெய்வமாக மருத்துவம் சேவையாக இருந்தது மக்களிடையே பார்வை இழப்பு நோய் என்பது மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கிராமப் பகுதியைச் சார்ந்த சாமானிய ஏழை, எளிய மக்களிடையே இது மிக அதிகமாகவே இருந்தது. யாரிடம் சென்று மருத்துவம் பார்ப்பது எனத் தெரியாமல் இருந்தது. சிறு வயதுக் குழந்தைகள் கூட முறையான மருத்துவ வசதியின்றி பார்வை இழந்த நிலையில் தவித்தனர். இதற்கு எதாவது செய்ய வேண்டுமென மருத்துவர் வெங்கிடசாமி தீர்மானித்து.
கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு மருத்துவரைத் தேடி வர வேண்டும் என மருத்துவர்கள் காத்திருக்கும் முறையை மாற்றி நோயாளிகளைத் தேடி கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை முன் வைத்தார் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் வெங்கிடசாமி.
இந்த நோக்கத்தோடு கிராமியக் கண் மருத்துவமனையை 1962 ஆம் ஆண்டில் அவர் துவங்கிய போது ஒட்டு மொத்த மருத்துவ உலகமும் இதை அதிர்ச்சியாகவே பார்த்தது.
மதுரை மாவட்டம், கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் நடந்த அவரது முதல் இலவச கிராமிய கண் மருத்துவ அறுவைங் சிகிச்சை முகாமில், சுமார் 2000 கண் நோயாளிகள் பங்கு பெற்றனர். 300 அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. இவர்கள் அனைவரையும் மருத்துவர் வெங்கிடசாமி தலைமையிலான மருத்துவக் குழு கிராமம் கிராமமாகத் தேடி தேடி சென்று முகாம் மூலம் அழைத்து வந்தது.
மருத்துவர் வெங்கிடசாமி அவர்களின் மருத்துவ சேவையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் மருத்துவர் நம்பெருமாள்சாமி.
இந்த இருவரது உழைப்பில் உருவானது தான் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.
அரவிந்த் கண் மருத்துவமனையில் விழித்திரை தொடர்பான கண் நோய்களுக்கு மருத்துவர் நம்பெருமாள்சாமி நிபுணத்துவம் பெற்றவராகவே இருந்தார்.
விழித்திரை எனும் Retina தான் கண்ணின் மிக முக்கியமான பகுதி. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்த விழித்திரை பாதிப்புக்கள் அதிகமாகவே இருந்து, அதனால் பார்வை இழப்புகளும் மிக அதிகமாக இருந்தது. எனவே மருத்துவர் நம்பெருமாள்சாமி இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இறங்கினார். இந்தியாவின் முதல் விழித்திரை சிகிச்சை நிபுணர் என்ற பெருமையைப் பெற்றார்.
மருத்துவர் நம்பெருமாள்சாமி விழித்திரை நீரழிவு தொடர்பாக மருத்துவம் செய்ததுடன் தன் ஆராய்ச்சிகள் மற்றும் வழிகாட்டல் மூலமாக பல மருத்துவர்களை உருவாக்கினார்.
"ஏழை எளிய சாமானிய மக்களுக்கு எந்தவிதமான லாப நோக்கங்களும் இன்றி தரத்திலும்,சேவையிலும் எந்தவிதமான பாகுபாடுமின்றி மருத்துவச் சேவையை முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும்..." என்பதை முழு முதல் நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனை அதன் பின் பல ஊர்களில் தன் விழுதுகள் போல கிளைகளைப் பரப்பியது அந்த ஆலமரம்
நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் அரவிந்த் கண் மருத்துவமனை இந்தக் கொள்கைகளில் இருந்து ஒரு இம்மி அளவு கூட அடிபிரளாமல் நடக்கிறது. அந்த மருத்துவமனையின் மருத்துவ முகாம் வாகனத்தின் சக்கரங்கள் தொடாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். கண் சம்பந்தப்பட்ட மருத்துவச் சேவைகள் அனைத்தும் அனைவருக்கும் முழுக்க முழுக்க இலவசம். இதில் எந்தப் பாடுபடும் இருக்காது. பணம் இல்லை என்பற்காக இந்த மருத்துவமனையில் எந்த மருத்துவமும், அது அறுவை சிகிச்சையாகவே இருந்தாலும், அது எக்காரணம் கொண்டும், எவருக்குமே தடைபடாது.
கண் மருத்துவத்துறையில் மருத்துவர் நம்பெருமாள்சாமியின் அசாதாரண உழைப்பை அங்கிகரிக்கும் வகையில் 2007 ஆம் ஆண்டில் மத்திய அரசு அவருக்கு பத்ம ஶ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்தது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் இதழ் உலகின் 100 பெருமைமிகு அடையாளங்கள் பட்டியலில் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களை வைத்துக் கொண்டாடியது.
இது போக உலகளவில் கண் மருத்துவத்துறையில் பெருமைமிகு விருதுகள் என என்னவெல்லாம் இருக்குமோ அந்த அத்தனை விருதுகளும் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களுக்கு தரப்பட்டு அதனால் அந்த விருதுகள் பெருமை தேடிக் கொண்டது.
இப்படி கண் மருத்துவ சேவையை ஏழை எளிய சாமானிய நடுத்தர மக்களுக்குத் தருவதே தன் வாழ்நாள் குறிக்கோளாக வைத்துக் கொண்டு தன் இறுதி மூச்சு வரையிலும் இயங்கிய மருத்துவர் நம்பெருமாள்சாமி இன்று ஜுலை 24 ஆம் தேதி காலை தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
பார்வை இழந்த எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் வெளிச்சமும் ஒளியும் தந்த அந்த மகா தீபம் தன் ஒளியை நிறுத்திக் கொண்டது.
இது உள்ளபடியே கண் மருத்துவத் துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாகும்.
மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களுக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
கண் மருத்துவத்துறையில் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களின் பெயர் கண்ணின் கருமணி போல என்றென்றைக்கும் புகழ் ஒளி வீசட்டும்ம்..
கருத்துகள்