சென்னை உயர் நீதிமன்றத்தின்
புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா -
ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா,
ராஜஸ்தான், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். சத்தீஷ்கரின் பிலஸ்பூரைச் சேர்ந்தவருக்கு தற்போது 61 வயது. 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.
பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.புதிய தலைமை நீதிபதி எம் எம் ஶ்ரீவஸ்தவா- வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், தமிழ்நாட்டின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் விளக்கி, நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவதற்கு காரணமான தலைமை நீதிபதி மூலமாக தமிழகத்திலும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாகப் பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்..
ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, 1892 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர் ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவதாகவும் உறுதி தெரிவித்தார்.
கருத்துகள்