தமிழ்நாடு அரசு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது- உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இயற்றிய மசோதக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், மற்றும் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்த
உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 111 பக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது
கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அதேபோல் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை கேள்வி கேட்கும் வகையில் மே மாதம் 13 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். குடியரசுத் தலைவர் அனுப்பிய 14 கேள்விகளை வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது விரிவான விசாரணை நடத்தியது.
10 நாட்கள்தொடர் விசாரணைக்கு பின்னர் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளி வைத்த நிலையில், இன்று இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் , நீதிபதிகள் சூர்யகாந்த் , விக்ரம் நாத் , பி.எஸ் நரசிம்மா , அதுல்.எஸ்.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் முக்கிய அம்சங்களை வழங்குவதற்கு முன்பாக வழக்கில் வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களைக் குறித்து கருத்து தெரிவித்ததில், (கருத்துத் தீர்ப்பாகாது) ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200 மற்றும் 21 ல் இருக்கும் அதிகாரம் குறித்து வாதம் வைக்கப்பட்டது. இதே போல் மசோதாவுக்கு ஒப்புதல் எவ்வாறு அளிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்தும் விரிவாக வாதங்கள் கேட்கப்பட்டது என்றும், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீதும் , மசோதாக்கள் மீது ஆளுநர் வசமுள்ள அவகாசங்கள் என்ன என்பது குறித்தும் அனைத்து தரப்பிலிருந்தும் வாதங்கள் வழக்கில் முன்வைக்கப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவை தவிர அரசியல் சாசன பிரிவு 200 ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உள்ள உச்ச வரம்புகள் குறித்தும் வாதம் முன்வைக்கப்பட்டது என்றும் கூறினர்.
ஒரு ஆளுநர் அமைச்சரவை ஆலோசனை, அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெளிவுபடுத்தி உள்ளது என்றதோடு ஒரு மசோதா அமைச்சரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய ஆதரவு இல்லாமல் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்காது என்றும் வாதங்கள் வைக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முதல் பிரதான பிரச்சனையாக உள்ளது மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்? என்பதுதான்.
அதன்படி ஒரு மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநருக்கு நான்கு விருப்பங்கள் வழங்கப்படுகிறது என ஒரு தரப்பு வாதங்களை முன் வைத்ததாகவும், ஆனால் மற்றொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் ஆளுநருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன் வைத்ததாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து வழக்கில் முக்கியமான தீர்ப்பின் அம்சங்களை நீதிபதிகள் வாசித்தனர்.
அதன்படி, மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது
நாட்டின் கூட்டாட்சியில் ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவை உடனான வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது
அரசியல் சாசனப் பிரிவு 200 ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது போல 4வது வாய்ப்பு இல்லை
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அதை நிராகரிக்க வேண்டும். இவைத்தவிர 4வது வாய்ப்புகள் ஆளுனருக்கு இல்லை
அரசியல் சாசனப் பிரிவு 200, 201-ன் படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
அரசியல் சாசன விதிகளின்படி மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கும் , மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரத்தைப் பெறுகிறார்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை
மாநில மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள நெளிவு சுளிவுகளுக்கு முரணாக உள்ளது, அதேவேளையில் ஏப்ரல் - 8ல் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு செல்ல விரும்பவில்லை
நீதிமன்றங்களால் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது
தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்கில் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதியில் ல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது
மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து முடிவெடுங்கள் என ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது, வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்
ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது, இருப்பினும் ஒரு மசோதா காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்
ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருந்தால் நீதிமன்றங்கள் நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றதோடு, ஆளுநர்களுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவையை பிறப்பிக்க முடியும்
என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு விபரம் :- 1. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரிடம் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?பதில்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பிவைக்கப்படும் போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, அரசியல் அமைப்பு பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் கட்டாயம் திருப்பி அனுப்புவதோடு இருக்க வேண்டும். (மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது) முதல் நிபந்தனை நான்காவது விருப்பம் இல்லை; மாறாக, இது ஒப்புதலை நிறுத்திவைக்கும் விருப்பத்திற்குத் தகுதி சேர்க்கிறது. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால், அது கட்டாயமாகச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்பப்பட வேண்டும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநரை நிறுத்திவைக்க அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கையைப் பலவீனப்படுத்தும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநர் வெறுமனே நிறுத்திவைக்க முடியும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவருக்குக் கிடைக்கும் அனைத்து விருப்பங்களைப் பயன்படுத்தும்போதும், ஆளுநர் அமைச்சரவை அளிக்கும் உதவி மற்றும் ஆலோசனையால் கட்டுப்பட்டவரா?
பதில்: பொதுவாக, ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படுகிறார். ஆனால் பிரிவு 200-ல், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையில் உள்ள "அவரது கருத்தில்" என்ற வார்த்தையின் பயன்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, ஆளுநர் பிரிவு 200-ன் கீழ் விருப்ப அதிகாரத்தைப் பெறுகிறார். மசோதாவைத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவருக்காக ஒதுக்கவோ ஆளுநருக்கு விருப்ப அதிகாரம் இருக்கிறது. 3. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா ?
பதில்: பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் நீதி விசாரணைக்கு உட்பட்டவை கிடையாது. அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவின் தகுதி மறுஆய்வில் நீதிமன்றம் நுழைய முடியாது. இருப்பினும், நீண்ட, விளக்கம் அளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மை நிலவும் வெளிப்படையான சூழ்நிலையின் போது, நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட ஆணையை பிறப்பித்து, ஆளுநரை ஒரு நியாயமான காலத்திற்குள் பிரிவு 200-ன் கீழ் தனது செயல்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிடலாம், ஆனால் விருப்ப அதிகாரத்தின் தகுதியைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது. 4. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 361, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்கள் தொடர்பான நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடையாக உள்ளதா?4. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 361, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்கள் தொடர்பான நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடையாக உள்ளதா?
பதில்: பிரிவு 361 நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடை தான். இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நீடித்த செயலற்ற நிலையில் இருக்கும போது, இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் பெற்ற வரையறுக்கப்பட்ட நீதி மறுஆய்வு வரம்பை ரத்து செய்ய பிரிவு 361 ஐ பயன்படுத்த முடியாது. ஆளுநர் தனிப்பட்ட விலக்கைப் பெற்றிருந்தாலும், ஆளுநரின் பதவி உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
5. அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரால் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை விதிக்க முடியுமா?
6. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா?
7. அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்த நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை விதிக்க முடியுமா?
பதில்கள் - கேள்விகள் 5, 6 மற்றும் 7 ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் பதிலளிக்கப்பட்டிருக்கிறது
அரசியல் பிரிவுகள் 200 மற்றும் 201-ன் உரை, நமது கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் சட்டமியற்றும் செயல்பாட்டில் எழக்கூடிய பல்வேறு சூழல்கள் மற்றும் சமநிலைப்படுத்தும் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு அதிகார மையங்கள் தங்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு ஒரு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே காலக்கெடுவை விதிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டம் இவ்வளவு கவனமாகக் காக்கும் இந்த நெகிழ்ச்சித்தன்மைக்கு முற்றிலும் முரணானது.
எனவே அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு இல்லாத நிலையில், பிரிவு 200-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பது உச்ச நீதிமன்றத்திற்குப் பொருத்தமானதாக இருக்காது. ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதே காரணங்களுக்காக, பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நீதி விசாரணைக்கு உட்பட்டது அல்ல. அதே காரணத்திற்காக, பிரிவு 201-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குக் குடியரசுத் தலைவரும் கட்டுப்பட முடியாது.
8. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் படி, ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது அல்லது வேறுவிதமாகச் செயல்படும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 143-ன் கீழ் ஒரு குறிப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
பதில்: ஆளுநர் ஒரு மசோதாவை ஒதுக்கும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவரின் அந்தநிலை திருப்தியே போதுமானது. தெளிவின்மை அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்யலாம்.
9. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதி விசாரணைக்கு உட்பட்டவையா? ஒரு மசோதா சட்டம் ஆவதற்கு முன், நீதிமன்றங்கள் அதன் உள்ளடக்கத்தின் மீது எந்த விதத்திலும் நீதித்துறைத் தீர்ப்பை மேற்கொள்வது அனுமதிக்கப்படுமா?
பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதி விசாரணைக்கு உட்பட்டவை அல்ல. மசோதாக்கள் சட்டம் ஆன பின்னரே, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
10. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை எந்த விதத்திலும் மாற்ற முடியுமா?
பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை இந்த நீதிமன்றத்தால் எந்த விதத்திலும் மாற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
11. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் அளித்த ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ள சட்டமாகுமா?
பதில்: கேள்வி 10-ன் பதிலின் அடிப்படையில் பதிலளிக்கப்படுகிறது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கே இடமில்லை. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் சட்டமியற்றும் பங்கை மற்றொரு அரசியலமைப்பு அதிகார மையத்தால் மாற்ற முடியாது.
12. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 145(3)-ன் நிபந்தனையின் அடிப்படையில், அதற்கு முன்னுள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கத்தைப் பொறுத்துச் சட்டத்தின் கணிசமான கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் தீர்மானிக்கவும், குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைக்கவும், இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்த அமர்வுக்கும் இது கட்டாயமில்லையா?
பதில்: இந்தக் கேள்வி இந்தப் பரிந்துரையின் செயல்பாட்டுத் தன்மைக்குத் தொடர்பில்லாததால், இதற்குப் பதிலளிக்கப்படவில்லை.
13. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் செயல்முறைச் சட்டம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதா அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம் அல்லது சட்டத்தின் சாராம்ச அல்லது செயல்முறை விதிகளுக்கு முரணான அல்லது பொருந்தாத உத்தரவுகளை/வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
பதில்: கேள்வி 10-ன் ஒரு பகுதியாகப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது (விளக்கம் - அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
14. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 131-ன் கீழ் ஒரு வழக்கின் மூலமாகத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடுக்கிறதா?
பதில்: இது சம்பந்தமே இல்லாதது எனக் கண்டறியப்பட்டதால் பதிலளிக்கப்படவில்லை. எனக் கூறப்பட்ட 111பக்கங்கள் கொண்ட தீர்ப்பு படித்தால் நமது குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் அதிகாரம் புரியும்.இந்திய அரசியல் அமைப்பு இறையாண்மைச் சட்டங்களை எப்பொழுதுமே விரிவாக வாசித்துப் புரிந்து கொள்ளாதவர்கள் எதை எதையோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நமது பாரத ஜனாதிபதி மீதும் மாநில கவர்னர்கள் மீதும் உச்ச நீதிமன்றமோ உயர்நீதிமன்றங்களோ எந்த ஒரு கட்டளையும் இட முடியாது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவை விமர்சிக்கவும் முடியாது என்பதுதான் இங்கு நெடுங்காலமாக நடந்து வரும் மரபுரிமையாக இருக்கிறது. எப்படி இங்கிலாந்து ராணியையோ மன்னர்களையோ அங்குள்ள நீதிமன்றங்களோ அல்லது பிறரோ விசாரணை வளயத்திற்குள் கொண்டு வர முடியாதோ அதுபோலத்தான் இந்தியாவில் ஜனாதிபதியின் குடிமையியல் உரிமைகளை மேற்சொன்ன இரண்டு நீதிமன்றங்களும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியாது.
இதையெல்லாம் புரியாத சில வழக்கறிஞர்கள் இந்தச் சட்டத்தைப் பற்றி ஏதாவது சொல்லி அதை நம்பிக் கொண்டிருக்கிறவர்களிடம் சென்று இப்படியெல்லாம் ரெஃபரன்ஸ் கொண்டுவர முடியாது என்று எதையெதையோ பிதற்றி நமக்குச் சாதகமாக அந்தத் தீர்ப்பு இல்லை எனவே நாம் வழக்குப் போடுவோம் என்றெல்லாம் வாக்குறுதி தருகிறார்கள். அது சாத்தியமில்லை





























கருத்துகள்