சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்
ரூ.14,260 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
நமது சத்தீஸ்கரும், நமது நாடும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர்
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், நவ ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைளில் சுமார் ரூ. 14,260 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
"இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதை, தற்போது வளர்ச்சியின் செழிப்பான மரமாக வளர்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒரு புதிய சட்டமன்றக் கட்டிடத்தின் வடிவத்தில், மாநிலம் ஜனநாயகத்தின் புதிய கோயிலையும் பெற்றுள்ளது, என்றார்.
சத்தீஸ்கர் மாநிலம் நாட்டின் மிகப்பெரிய பழங்குடி மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும் என்றும், பெருமைமிக்க வரலாறு மற்றும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்புகளைக் கொண்ட சமூகம் என்றும் குறிப்பிட்ட திரு மோடி, பழங்குடி சமூகங்களின் பங்களிப்புகளை முழு தேசமும், உலகமும் அங்கீகரித்துக் கொண்டாடுவதை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினார். நாடு முழுவதும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகங்களை நிறுவியது, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடி கௌரவ தினமாக அறிவித்ததன் மூலம், பழங்குடி சமூகத்தின் பாரம்பரியத்தைக் கௌரவித்துப் போற்றுவதே அரசின் தொடர்ச்சியான முயற்சியாகும், என்றார் அவர்.
நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து சத்தீஸ்கர் இப்போது தன்னை விடுவித்துக் கொண்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், நக்சலிசத்தால் 50–55 ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார். 2014-ஆம் ஆண்டு நாடு தனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது, தனது அரசு இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கத் தீர்மானித்ததாக திரு மோடி குறிப்பிட்டார். இதன் விளைவாக, பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, 125க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று, மாவோயிஸ்ட் நடவடிக்கையின் தடயங்கள் மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளன என்றும் கூறினார். "சத்தீஸ்கர் மாநிலமும், ஒட்டுமொத்த நாடும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா, மாநில முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், மத்திய அமைச்சர்கள், திரு ஜூவல் ஓரம், திரு துர்கா தாஸ் உய்கே, திரு டோகன் சாஹு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்