சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் கொவிட்-19 நிலவரம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய உள்துறை செயலாளர் தலைமை வகித்தார்
மத்தியப் பிரதேசத்தின் கொவிட்-19 நிலவரம் மற்றும் அம்மாநில அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கொரோனா மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷனுடன் இணைந்து மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா தலைமை வகித்தார்.
மத்தியப் பிரதேச தலைமை செயலாளர் திரு இக்பால் சிங், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் (பேராசிரியர்) சுனில் குமார் மற்றும் மத்தியப் பிரதேச அரசின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் ஒரே வாரத்தில் 13.4 சதவீதம் அதிகரித்த நிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள 44 மாவட்டங்களில் கடந்த 30 நாட்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை (குறிப்பாக பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகள்) மற்றும் இதர மருத்துவமனை உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட, மாநிலத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கையில் உள்ள முட்டுக்கட்டைகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் பேசினார்.
மக்களின் அத்தியாவசியமற்ற போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறு மாநில அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார செயலாளர், மத்திய அரசு நிறுவனங்களின் (ரயில்வே, தொழிலாளர் அரசு காப்பீடு, செயில், கோல் இந்தியா) மருத்துவமனைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல்; கண்டறிதல், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு; மருத்துவ சிகிச்சை மற்றும் ஆதரவு வழிமுறை; பாதுகாப்பான கொவிட் நடத்தைமுறை; மற்றும் தகுதியுடைய அனைவருக்கும் 100 சதவீத தடுப்புமருந்து வழங்கல் ஆகிய ஐந்துமுனை யுக்திகள் மீது தீவிர கவனம் செலுத்துமாறும் மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்