திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கொவிட் பணியிட தடுப்பூசி இயக்கம்
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகம், கொவிட் பணியிட தடுப்பூசி இயக்கத்தை தனது வளாக மருத்துவமனையில் 22.4.2021 மற்றும் 23.4.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடத்துகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள, விருப்பமுள்ள அனைத்து ஊழியர்களுக்கும், தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த தடுப்பூசி இயக்கத்தை இன்று காலை 10 மணிக்கு நிறுவன இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், பதிவாளர் டாக்டர் அறிவழகன், மருத்துவமனை ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் ஜே.ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இயக்குனர் தனது துவக்கவுரையில், தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் அவசியமானது என்பதை வலியுறுத்தினார்; தான் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரிகள் டாக்டர் ஆர். பிரியங்கா, டாக்டர் விக்னேஷ், டாக்டர் அன்னபூரணி மற்றும் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையின் மருத்துவக் குழு, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் மருத்துவக் குழுவுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தினர். இந்த இரண்டு நாள் தடுப்பூசி இயக்கத்தின் போது 200 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கொவிட் முன்னெச்சரிக்கைகள் மற்றும் நடைமுறைகளுடன், பயனாளிகள் டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தடுப்பூசிக்குப் பிறகு, பயனாளிகள் 30 நிமிடத்திற்கு கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்காலிக தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறுவன ஊழியர்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இந்தத் தகவலைத் தெரிவிக்கிறது.
கருத்துகள்