உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்

அளவான குடும்பங்களே வளமான நாட்டின் அடித்தளம்; தகுதிவாய்ந்த தம்பதியர் அரசின் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைமுறைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்: மருத்துவர் மலர்விழி.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நலத்துறையும் இணைந்து “ உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்” குறித்த இணையதளக் கருத்தரங்கை இன்று நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் என்.மலர்விழி, “தன்னம்பிக்கையும் தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்ப நலத்திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்தல்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8.25 கோடியாக உள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.06 ஆகவும், தமிழகத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61 ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் ஆண் – பெண் விகிதம் 943 ஆகவும், தமிழகத்தில் 996 ஆகவும் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை சரிசெய்யும் பொருட்டு, போதிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக இளம்வயது திருமணத்தைத் தடுத்தல், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் இடையே போதிய இடைவெளி விடுதல், குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல், பிரசவம் மற்றும் கருக்கலைப்புக்குப்பின் குடும்பநல முறைகளை அனுசரித்தல் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பெண்களுக்கான குடும்பநல அறுவைச் சிகிச்சைகளான டியூபெக்டமி மற்றும் லாப்ராஸ்கோப்பி, காப்பர் டி-375 (5 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) மற்றும் காப்பர் டி-380ஏ பொருத்துதல் (10 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பயிற்சி பெற்ற மருத்துவர்களால் ஒரு சில  நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை சிகிச்சையான நவீன வாசெக்டமியும் செய்யப்படுகிறது. இந்த இலவச சேவைகளை தகுதி வாய்ந்த தம்பதியர் தயக்கமின்றி   பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதற்கு அரசு ஊக்கத்தொகையும் தருவதாக குறிப்பிட்டார் மருத்துவர் மலர்விழி.       

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமையுரையாற்றியபோது, கல்வியறிவு, சட்ட திட்டங்களை முறையாகக் கடைபிடிக்கும் அறிவுடைய சமூதாயத்தின் மூலமே நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். எனவே நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே கொரோனா போன்ற தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சி மேம்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கல்வித் தகவல் அலுவலர் இரா.வீராச்சாமி, மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் வி.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார். கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் நன்றியுரை ஆற்றினார். இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா